'அனைவருக்கும் சம உரிமை!'- முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி!

மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமையை அளிக்கும் வகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததும், ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும் என, உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து உள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஆளுங்கட்சியான பாஜக, கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று பேரை முதலமைச்சராக பதவி அமர்த்தி உள்ளது. திரிவேந்திர சிங் ராவத், திரத் சிங் ராவத் ஆகியோருக்கு பிறகு, புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக பதவி ஏற்றார். தற்போது இவரது தலைமையில், சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் சிங் ராவத் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு, உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது:

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடனே, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமையை அளிக்கும் வகையில், ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும்.

இந்த சட்டம் மூலம் திருமணம், விவாகரத்து, நிலம் – சொத்து போன்ற விவகாரங்களில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படும். மேலும், இந்த சட்டம் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும். பாலின நீதியை மேம்படுத்தும். பெண்கள் அதிகாரத்தை வலுப்படுத்தும் மற்றும் மாநிலத்தின் அசாதாரண கலாசார – ஆன்மிக அடையாளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.