உத்தரபிரதேசத்தில் 55 தொகுதியில் 2ம் கட்ட தேர்தல்; கோவா, உத்தரகாண்டில் ஆட்சியை பிடிப்பது யார்? நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

புதுடெல்லி: கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சியை பிடிப்பது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை 55 தொகுதிகளில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. முதற்கட்ட தேர்தல் கடந்த 10ம் தேதி உத்தரபிரதேசத்தில் 58 தொகுதிகளில் நடைபெற்றது. அங்கு கடைசி மற்றும் 7வது கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 28ம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 5ம் தேதி 2ம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதியும், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் நாளை (பிப். 14) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதேபோல் உத்தரபிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 55 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ளது. இங்கு, நேற்று மாலை 5 மணியுடன் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரசாரம் ஓய்ந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தை பொறுத்தமட்டில் 70 பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. ெமாத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோவா மாநிலத்தில் 40 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு ஆளும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான கோவா முன்னேற்றக் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக கோவா பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் இணைந்து 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேசியவாத காங்கிரஸ் (13), சிவசேனா (11) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. உத்தரபிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக நாளை 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உத்தரகாண்ட், கோவாவில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது தோல்வியை தழுவுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேற்கண்ட 2 மாநிலங்கள் மற்றும் உத்தரபிரதேச 2ம் கட்ட தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.