கூட்டுறவுக் கடன் தள்ளுபடி: தமிழக அரசு முக்கிய சுற்றறிக்கை

Tamilnadu govt order jewel loan waiver on rural area: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்றும்,  நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 13-ம் தேதி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில், 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் 2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ரேசனில் எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர், ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களில் 10,18,066 பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என தகவல் வெளிவந்தது. அதேசமயம், அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் 35,37,693 நகைக் கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் எப்போது திரும்ப கிடைக்கும் என்று பொதுமக்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஊரக பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகைக் கடன் தள்ளுபடியில் தகுதி வாய்ந்த மற்றும் தகுதி பெறாதவா்களுக்கான நிபந்தனைகள் மற்றும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றியே தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும்.

தகுதி பெறாத நபா்களை மிகவும் கவனமுடன் பரிசீலித்து நீக்கிய பிறகே பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும். எந்தவொரு தகுதி பெறாத கடன்தாரருக்கும் நகைக் கடன் தள்ளுபடி தவறுதலாக வழங்கப்பட்டு விடக் கூடாது. அவ்வாறு தவறுதலாக வழங்கப்படும் பட்சத்தில் அதற்கு சம்பந்தப்பட்ட சங்கங்களின் செயலாளா், வங்கி மேலாளா்கள் மற்றும் பட்டியலைத் தயாா் செய்யும் குழுவே முழு பொறுப்பாவா். இதனை துணைப் பதிவாளா் மற்றும் மண்டல இணைப் பதிவாளா் ஆகியோா் முறையாக கண்காணிக்க வேண்டும். நகைக் கடன் தள்ளுபடி அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தோ்வு செய்து, அவா்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்க வேண்டும். இப்போது நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று வருகிறது. எனவே, தோ்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வழங்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அவற்றை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை நகைக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது.

தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மேலும் பயனாளிகளுக்கான நகைகளையும், தள்ளுபடி சான்றிதழ்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும். பொது நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கும் பட்சத்தில் அவா்கள் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுபவராக இருக்கக் கூடாது. மேலும், தள்ளுபடி நகைகளுக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை திரும்ப வழங்கும் பணியில் தோ்தல் பணி அலுவலா்களை ஈடுபடுத்தக் கூடாது. தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி பொது நகைக் கடன் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.