கோவை  மாவட்ட ஊர்க்காவல் படையில் 3 திருநங்கைகள் பணி நியமனம்: பொதுமக்கள், பல்வேறு தரப்பினர் வரவேற்பு

கோவை: கோவை மாவட்ட ஊர்்க்காவல் படையில் 3 திருநங்கைகள் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில், மாவட்ட ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் 380-க்கும் மேற்பட்டோர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தைச் சேர்்ந்த திருநங்கைகளான சிறுமுகையைச் சேர்ந்த வருணாஸ்ரீ(21), தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த மஞ்சு(29), போத்தனூரைச் சேர்்ந்த சுசித்ரா பன்னீர்செல்வம்(27) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேற்கண்ட மூவருக்கும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முறை, பாதுகாப்புப பணியில் ஈடுபடும் முறை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை குறித்து கடந்த இரண்டு வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. இப்பயிற்சியைத் தொடர்ந்து, இவர்கள் மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட காவல்துறையினர் கூறும்போது,‘‘ இதில் வருணாஸ்ரீ பிளஸ் 2 முடித்துள்ளார். கட்டிடத் தொழிலுக்கு சென்று வருகிறார். இவர், சிறுமுகையில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் போது உடலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்களும் வருணாஸ்ரீீயை ஏற்றுக் கொண்டு அவரை தொடர்ந்து பிளஸ் 2 வரை படிக்க வைத்துள்ளனர். அதற்கு மேல் நிதியில்லாததால் அவரால் படிக்க இயலவில்லை. காவலர் ஆவதே லட்சியம் என இலக்கை அவர் கொண்டுள்ளார். அதேபோல், மஞ்சு, பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் குடும்பத்தை பிரிந்து ஆதரவற்ற இருந்த போது, டெய்லரிங் தொழில் கற்று தையல் தொழில் செய்து வந்தார். மேலும், அரசு உதவியுடன் ஆட்டோ வாங்கி, ஆட்டோவும் ஓட்டி வருகிறார். தந்தை மறைவுக்கு பிறகு, அவரது தாய் இவரை ஏற்றுக் கொண்டதால், அவருடன் தற்போது வசித்து வருகிறார். சுசித்ரா பன்னீர்செல்வம் பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். ஆன்லைன் ரேடியோவில் ஆர்.ஜேவாக பணியாற்றிக் கொண்டு, வாடகைக் காரும் ஓட்டி வருகிறார். இவர் பட்டப்படிப்பை முடித்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஆக வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளார். இவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்ற பின்னர், இரண்டு வார கால பயிற்சிகள் அளிக்ப்பட்டது. இதைத் தொடர்ந்து மூவரும் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணியில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்,’’ என்றனர்.

மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வழக்கமாக, மூன்றாம் பாலினத்தவர்கள் என்றால், ஒரு வித தவறான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதை மாற்றும் வகையில் அரசு சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு, அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் மாவட்ட ஊர்்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்க்கப்பட்டது பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.