நடிப்பில் மகான் அப்பா..: மனம் திறக்கும் துருவ் விக்ரம்

ஆட்டம் காட்டும் அந்நியன், அரவணைக்கும் அம்பி, அசத்தும் ரெமோ என கேரக்டர்களாகவே மாறி, 'என்ன நடிப்புய்யா சும்மா பட்டைய கிளப்புறாருய்யா' என ரசிகர்களை ஆரவாரமாக ஆட்டம் போட வைக்கும் விக்ரம் உடன் 'மகான்' படத்தில் நடித்த அவரது மகன் துருவ் விக்ரம் மனம் திறக்கிறார்….
மகான் படம் பற்றி
‛மகான்' படத்தில் அப்பா விக்ரம் 'காந்தி மகான்' என்ற கேரக்டரில் வருகிறார். அது சிறு வயது முதல் 65 வயது வரை போகும். அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பது கதை. அப்பா தான் ஹீரோ நான் அவருக்கு மகனாக சின்ன கேரக்டரில் நடிச்சிருக்கேன். படத்தில் உளவியல் ரீதியாக சிறிது சிரமப்பட்டு நடித்தேன்.
அப்பாவிடம் கற்றது என்ன
‛ஆதித்யா வர்மா' படத்திற்கு பின் அப்பா உடன் நடிக்கிறேன். இந்த அனுபவத்தை மறக்க மாட்டேன். தினமும் செட்டில் அவரிடம் ஏதாவது கற்றுக்கொண்டே தான் இருந்தேன். அவ்வளவு 'எனர்ஜியா' இருக்காரு. எப்படி அடுத்தடுத்து நடிக்கிறார்னு பார்த்தேன். இரண்டு கேரக்டரும் வித்தியாசமா இருக்கும்
வெளிநாட்டில் படிக்க போனீங்க… மீண்டும் நடிப்பில்…
படிச்சு முடிச்சுட்டேன்… இப்போது முழுநேரம் சினிமாவில் தான் கவனம் செலுத்துறேன், மியூசிக் வீடியோ ஆல்பம் பண்ணனும்னு ஆசை இருக்கு விரைவில் அதுவும் நடக்கும்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடம் வேலை பார்த்தது
10வது படிக்கும் போது அவர் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். நான் அம்மா எல்லாம் அவரோட 'பீட்சா' நைட் ஷோ பார்த்தோம். இரண்டாவது படமே அவர் இயக்கத்தில் நடித்தது சந்தோஷம்.
துப்பாக்கி எல்லாம் பிடிச்சு பயங்கரமாக சண்டை…
அப்பாவின் 'பீமா', 'சாமி' படங்கள் பார்த்து ஒரு நாள் துப்பாக்கி பிடிக்கணும்னு ஆசைபட்டேன். அந்த ஆசை 'மகான்' படம் மூலமா நிறைவேறியது. இந்த படத்தில் அப்பாவுக்காக 'ரப் வாய்ஸ் டப்பிங்' பேசியிருக்கேன்.
இரண்டு பேரும் அண்ணன், தம்பி மாதிரி இருக்கீங்க
நிறைய பேரு அப்படி தான் சொல்றாங்க… பசித்தாலும் சாப்பிடாமல் உடம்பை மெயின்டெய்ன் பண்ணுவார். 'நீங்கள் ரொம்ப கடுமையாக உழைச்சிட்டிங்க போதும்ப்பா'னு சொல்லி இருக்கேன். அப்பா 60 படங்களில் நடித்துள்ளார். ஆனால் 'மகான்'னில் 60 படங்களில் நடித்த அனுபவம் எனக்கு கிடைத்தது.
அப்பாவிடம் இருந்து பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
அப்பா செட்டுக்குள்ள வரும் போதே போன் வச்சுட்டு, எல்லா விஷயத்தையும் மறந்துட்டு அந்த கேரக்டராக மாறி விடுவார். அவர் நடிப்பில் ஒரு மகான்; நான் கொஞ்சம் சோம்பேறி, அவர்கிட்ட இருந்து கடின உழைப்பை நான் பின்பற்ற வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.