பிப். 19 வரை 144 தடை உத்தரவு – மாநில அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் நாளை காலை முதல் வரும் 19 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பல மாவட்டங்களின் பள்ளி – கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட நிலையில் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஹிஜாப் விவகாரம்
தற்போது கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக பி.யூ. அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியது. இந்த விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்றத்தை நாடிய நிலையிலும், இன்னமும் கூட பதற்றமான சூழ்நிலையே அங்கு நிலவி வருகிறது. மாணவர்கள் மாறி மாறி கோஷங்களை எழுப்பி கற்களை வீசி தாக்கிக் கொண்டதன் எதிரொலியாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தடை உத்தரவு நாளை காலை 6 மணி முதல் வரும் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள உடுப்பி மாவட்ட காவல் துறை, பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்திற்கு கூட்டம் கூடவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி இல்லை என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக பெங்களூரில் பள்ளி – கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வரும் 22 ஆம் தேதி வரை பிறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உடுப்பி மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.