பிரான்ஸ் நாட்டில் இருந்து 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகை..!

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசியாக 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56,000 கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016ம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி முதல் கட்டமாக 10 ரபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில் அதில் 5 விமானங்கள் 2020ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி இந்தியா வந்தன.அவை முறைப்படி இந்திய விமானப் படையில் செப்டம்பர் 10ம் தேதி இணைக்கப்பட்டன. 2ம் கட்டமாக 3 ரபேல் போர் விமானங்கள் வந்தன. அவை மேற்கு வங்காளத்தில் உள்ள அசிமாரா தளத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக பல கட்டங்களாக போர் விமானங்கள் வந்தன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி கட்டமாக 3 ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகிறது. இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறுகையில், ‘முந்தைய நிகழ்வுகளை போல கடைசியாக 3 ரபேல் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்பப்பட்டு பிரான்சில் இருந்து நேரடியாக வரும். ரபேல் போர் விமானங்கள் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுத தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானில் இருந்து இலக்கை குறிவைத்து தாக்குதல். ஏவுகணையை இடைமறித்து தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் உள்ளன. இந்த விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கி.மீ. தூரத்திற்கு செல்லும் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 2,223 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை பெற்றது’ என்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.