பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: மேலும் 90 பவுன் நகை சிக்கியது; சீருடையில் இருந்து ரூ.25 ஆயிரமும் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விடிய விடிய நடத்திய சோதனையில் மேலும் 90 பவுன் நகை சிக்கியது. அத்துடன் பணிமுடிந்து வந்த பின்பு வீட்டில் காக்கி சீருடையை சோதனையிட்டபோது அதில் இருந்து ரூ.25 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கண்மணி(52). இவரது கணவர் சேவியர் பாண்டியன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் உதவி இயக்குனராக உள்ளார். கண்மணி இதற்கு முன்பு 4 ஆண்டுகள் குமரி எஸ்.பி. அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றியபோது இவரும், கணவரும் சேர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த தொடர் புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சென்றது. கண்மணியும், கணவரும் காவல்துறை, மற்றும் நீதித்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் ஆதாரத்துடன் நடவடிக்கை எடுப்பதில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் குமரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர்பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை ராமன்புதூரில் உள்ள கண்மணி வீடு, மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது தோழி அமுதா வீடு ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இச்சோதனையில் கணக்கில் வராத ரூ.7 லட்சத்திற்கும் மேலான ரொக்க பணம், ரூ.1 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மேலான சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர். இச்சோதனை இன்று அதிகாலை 4 மணி வரை நீடித்தது. 22 மணி நேரம் நடந்த சோதனையில் மேலும் பல ஆவணங்கள் சிக்கின.

கண்மணியின் வீட்டில் இருந்து 90 பவுன் நகை கைப்பற்றப்பட்டது. அத்துடன் கண்மணியின் தாயாரின் பெயரில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.43 லட்சம் வங்கியில் 3 தவணையாக முதலீடு செய்ததற்கான ஆவணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றினர். இதனால் கண்மணியின் வீடு முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அனைத்து உடமைகளையும் சோதனை செய்தனர். காவல் நிலையத்தில் பணி முடிந்து வந்த பின்னர் வீட்டில் போட்டிருந்த கண்மணியின் காவல் சீருடையின் பாக்கெட்டை சோதனை செய்தபோது அதிலிருந்து ரப்பர் பேன்டால் கட்டப்பட்ட 500 ரூபாய் அடங்கிய 3 கட்டு பணம் கைப்பற்றப்பட்டன. அதிலிருந்த ரூ.25 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கண்மணியின் வீட்டில் சிக்கிய 90 பவுன் நகைக்கான விவரங்களை சேகரித்த பின்னர், மீண்டும் அவரிடமே நகையை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனர்.

இதைப்போல் கண்மணியின் தோழி அமுதா வீட்டிலும் நடத்திய சோதனையில் ரூ.20 லட்சத்திற்கும் மேலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கண்மணி, மற்றும் கண்மணியின் தோழி அமுதா வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம், ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றி அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். கண்மணி, அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கைக்கு மேலதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

வங்கி லாக்கர்கள் நாளை சோதனை: காவல் ஆய்வாளர் கண்மணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத பல ஆவணங்கள், மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து மேலும் சோதனையை தொடர லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து குமரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர்பால் கூறுகையில். ”கண்மணியும், அவரது கணவரும் காவல்துறை, நீதித்துறையின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் தம் மீது எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்க மாட்டார்கள் என்ற அலட்சியத்தில் இருந்துள்ளனர். இதனால் தான் பல கணக்கில் வராத ஆவணங்களும், பணமும் வீட்டில் ஆதாரத்துடன் சிக்கியுள்ளன.

கணவன், மனைவி இருவரின் மாத ஊதியத்தை கணக்கிடுகையில் இதுவரை அவர்கள் பெற்ற வருவாயில் இருந்து 171 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்தும், பணமும் சேர்த்திருப்பது இந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஆதாரத்துடன் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பல முதலீடுகளை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் ஒருபகுதியாக ஆய்வாளர் கண்மணியின் வங்கி லாக்கர்களை நாளை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையிட உள்ளோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.