மட்டன் முருங்கைக்கீரைச் சாறு | மத்தி மீன் குருமா| காளான் மலபாரி – சத்தான வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வீட்டுச் சாப்பாடாக இருக்க வேண்டும்… அதே நேரம் ஹோட்டல் ருசியும் வேண்டும்… இதுதான் பலரின் விருப்பமும். அப்படி ஆசைப்படுவோருக்கான சைவ, அசைவ சமையல் குறிப்புகள்தான் இவை. இந்த வார வீக் எண்டுக்கு ருசியான, சத்தான ஹோம்லி சாப்பாட்டை முயற்சி செய்யுங்களேன்…

தேவையானவை:
எலும்புள்ள மட்டன் துண்டுகள் – 150 கிராம்
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி அளவு
கேரட் – ஒன்று
தக்காளி – 2
பிரிஞ்சி இலை – ஒன்று
மிளகுத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்றில் பாதி
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய்- 2
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 6 பல்
மல்லித்தூள் (தனியாத்தூள் ) – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – ஒன்றரை லிட்டர்

மட்டன் முருங்கைக்கீரைச் சாறு

செய்முறை:
மட்டனை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, சேர்த்து நிறம் மாற வதக்கி, முருங்கைக்கீரையைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் மீடியம் சைஸில் நறுக்கிய கேரட், தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும்வரை வதக்கி, தண்ணீர் ஊற்றி மட்டன் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். மட்டன் வெந்ததும் கொத்தமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.

தேவையானவை:
கேரட் – ஒன்று
வாழைக்காய் – ஒன்றில் பாதி
கத்திரிக்காய் – ஒன்று
முருங்கைக்காய் – ஒன்றில் பாதி
பெரிய வெங்காயம் – ஒன்று
உருளைக்கிழங்கு – ஒன்று

அரைக்க:
தேங்காய் – ஒன்றில் பாதி (துருவிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் – 5
பூண்டு – 2 பல்
இஞ்சி – ஒரு துண்டு
மல்லித்தூள் ( தனியாத்தூள் )
– ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிமசாலாத்தூள் – முக்கால் டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்

தாளிக்க:
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டேபிள்ஸ்பூன்
கறிவேப்பலை – சிறிதளவு

வெட்டி முறித்த காய்கறிக் குழம்பு

செய்முறை:
காய்களை மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, இத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் உப்பு, அரைத்து வைத்துள்ள விழுதை தேவையான அளவு தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். காய்கள் வேகும் வரை அடுப்பில் வைத்து வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

தேவையானவை:
காளான் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
நறுக்கிய இஞ்சி – கால் டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 50 மில்லி.
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

காளான் மலபாரி

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூளைச் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இத்துடன் சுத்தம் செய்த காளான் சேர்த்து வெந்ததும், தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

தேவையானவை:
மத்தி மீன் – அரை கிலோ
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 15
(இரண்டாக நறுக்கவும்)
கடுகு – 1 டீஸ்பூன்
புளி – 10 கிராம்
உப்பு – தேவையான அளவு

அரைக்க:
தேங்காய் – ஒன்றில் பாதி (துருவிக் கொள்ளவும்)
கசகசா – ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 3
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 3 பல்
மல்லி ( தனியா) – அரை டீஸ்பூன்

மத்தி மீன் குருமா

செய்முறை:

சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். மீனை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றவும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலா வாசனை போகும் வரை வதக்கி, மத்தி மீனை அதில் சேர்த்து கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைத்து மீன் நன்கு வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.