முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடக்கும் விதம்: சரத்குமார் கடும் அதிருப்தி

சென்னை: ’முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று துவங்கியிருக்கும் நிலையில், தேர்வர்களுக்கு தொலைதூரங்களில் தேர்வு மையம் ஒதுக்கியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது’ என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக அறிவிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று துவங்கியிருக்கும் நிலையில், தேர்வர்களுக்கு தொலைதூரங்களில் தேர்வுமையம் ஒதுக்கியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

தேர்வர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொள்ளாமல், தென்காசி மாவட்ட தேர்வர்களுக்கு குமரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்தும், கோவை பகுதி தேர்வர்களுக்கு சேலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்தும், இவ்வாறாக தமிழகம் முழுவதும் தேர்வர்களுக்கு தேர்வு மையங்களை தொலைதூரங்களில் அமைத்து காலை 7.30 மணிக்குள்ளாக தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்றும், 8.15 மணிக்கு மேல் ஒருவரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அறிகிறேன்.

இன்று துவங்கி 20-ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ள நிலையில், 150 கி.மீக்கும் மேலாக உள்ள தேர்வு மையங்களுக்கு, தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக சென்று தேர்வெழுதி வருவதும், பெண் தேர்வர்கள், குறிப்பாக கர்ப்பிணியாக உள்ள தேர்வர்கள் தேர்வு மையங்கள் அருகே தங்கியிருந்து தேர்வு எழுதுவதும், தேர்வர்களுக்கு இக்கட்டான நெருக்கடியை உண்டாக்கி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்பதை தேர்வு வாரியம் உணரவில்லை.

இத்தகைய குழப்பங்களால் தேர்வர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம், இனி இந்த நிலை தொடராமல் செயல்பட வேண்டும். மேலும், ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வின் போது, அவரவர் மாவட்டத்திற்குள்ளாக, தேர்வர்களின் பகுதிக்கு அருகாமையில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று சரத்குமார் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.