"அந்த ஒரு சீன்ல நான் வர்றதுக்காக வடிவேலுண்ணே அவ்வளவு போராடினார்!"- நெகிழும் அமிர்தலிங்கம்

வடிவேலுவின் காமெடி டீம்… இயக்குநர் ஹரியின் படங்களில் சின்ன ரோலாக இருந்தாலும் செம ஸ்கோர் செய்பவர் அமிர்தலிங்கம். அடிக்கடி படங்களில் பார்த்திருக்கலாம். சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக 500 படங்களில் நடித்திருப்பவரான அமிர்தலிங்கத்திடம் பேசினேன்.

“எதாவது ஒரு துறையில சாதிக்கணும்னு விரும்பினேன். சினிமா என் லட்சிய பயணம். அதுல இத்தனை வருஷங்களாக இருக்கறது சந்தோஷமா இருக்கு. நாம மறைந்தாலும் ‘இப்படி ஒருத்தர் இருக்கார்’னு மத்தவங்க சொல்லணும்னு விரும்பினேன். ஆரம்ப காலங்கள்ல மேடை நாடகங்கள்ல இருந்தாலும், 1980க்கு பிறகுதான் சினிமா வாய்ப்பு அமைஞ்சது. வந்ததும் பெருசா சாதிக்க முடியலைனாலும், ஒரு அடையாளமா மாறுறதுக்கே பாதி வருஷம் செலவாகிடுச்சு. கவுண்டமனியண்ணே, செந்திலண்ணே கூடவெல்லாம் நிறைய நடிச்சிருந்தாலும் அப்ப நான் கவனம் பெறல. வடிவேலுண்ணே கூட நடிக்க ஆரம்பிச்ச பயணம்தான் எனக்கு திருப்புமுனையாச்சு. அவரோடு முதன்முதல்லா ‘பவித்ரா’வுல நடிச்சிருப்பேன். அதுல நான் போஸ்ட்மேனா இருப்பேன். அப்புறம் ‘ஏபிசிடி’யில பாம்பை பார்த்து அலறும் பஸ் டிரைவரா இருப்பேன். இப்படி அவரோட நடிச்ச படங்கள் அத்தனையிலும் நான் கவனிக்கப்பட்டேன். விவேக் சாரோட நிறைய படங்கள்ல நடிச்சிட்டேன். அவரோட நடிச்சதுல ‘ஜூட்’ல பழ வியாபாரியா இருப்பேன். ‘சண்ட’ல நாட்டாமை அசிஸ்டென்ட்டா இருப்பேன்.”

ஏரோபிளேன் காமெடியில்…

‘ஆறு’ படத்துல நீங்க ஏரோப்பிளேன்ல இருந்து விழுந்துட்டேன்னு சொல்ற காமெடி உங்களுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த ஒண்ணு… அதைப் பற்றிச் சொல்லுங்கள் என நாம் கேட்டதற்கு…

“ஆமாங்க. அந்தப் படத்துல நான் கத்துக்கிட்ட விஷயம் நிறைய. சினிமாவுல வேஷம் கிடைக்கறது அவ்ளோ சுலபம் இல்லைனு அந்தப் படத்துல இருந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா ஒரு ஷாட்ல வர்றது கூட எளிதானது இல்ல. பெரிய போராட்டம் இருக்கும்னு அனுபவபமாச்சு. வடிவேலுண்ணேகிட்ட நடிக்க வாய்ப்புக் கேட்டுப் போனேன். அவர் கொடுத்த வாய்ப்பு அது. மறுநாள் காலையில சைதாப்பேட்டையில ஷூட்டிங்.

‘இவர்தான் அந்த கேரக்டரை பண்றார்’னு டைரக்டர் ஹரி சார்கிட்ட அண்ணன் சொன்னார். ஆனா, சாயங்காலம் அஞ்சு மணி வரை அங்கே இருக்கேன். அண்ணன் சொன்ன ஷாட்ல என்னை நடிக்க வைக்கவே இல்ல. டைரக்டர் வேற யாரெல்லாமோ வச்சு அந்த ஷாட்டை எடுத்துப் பார்க்கறார். வடிவேலுண்ணனோ இதைப்பத்தி டைரக்டர்கிட்ட கேட்க… அவரோ ‘எனக்கு வேற ஒரு கேரக்டர் வச்சிருக்கேன்’னு சொல்லிட்டார்.

அப்ப வடிவேலுண்ணேதான் ஹரி சார்கிட்ட ‘இல்லீங்க. காமெடிக்குனு ஒரு டைமிங் இருக்கு. அந்த டைமிங் மிஸ் ஆகிட்டா அப்புறம் அந்த காமெடி ஒர்க் அவுட் ஆகாது’னு சொன்னார். அதுக்கு டைரக்டரோ, ‘இல்லீங்க… அந்த கேரக்டருக்கு நான் ஆயிரம் பேர்ல இருந்து ரெண்டு பேரை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்’னு சொன்னார். எனக்கோ தலைசுத்துது… இதற்கிடையே சாயங்காலம் ஆகிடுச்சு. லைட் போகப் போற டைம் வேற ஆகுது. இடையிடையே டைரக்டர் அவரோட உதவி இயக்குநர்கள்ல இருந்து பலரும் அந்த கேரக்டரை நடிக்க வச்சுக்கிட்டிருந்தார். ஆனாலும் அவர் எதிர்பார்க்கறது வரல.

அமிர்தலிங்கம்

கடைசியா வடிவேலுண்னேகிட்ட டைரக்டர், ‘இந்த சீனை நாம டிஸ்கஸ் பண்ணிட்டு நாளை எடுத்துக்கலாம்’னு சொல்ல… மறுநாள் வடிவேலுண்னே ஷூட் வரணும்னா அவருக்கு பத்து லட்சம் சம்பளம். அதனால அன்னிக்கு இருந்த கடைசி இருபது நிமிஷத்துல வேற வழியில்லாமல் என்னை நடிக்கச் சொன்னாங்க. நானும் ஒரே ஷாட்ல நடிச்சு ஓகே பண்ணிட்டேன். வடிவேலுண்ணே அப்படியே வந்து என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார். இதுக்காக அவர் அவ்ளோ பாடுபட்டார். இந்த கேரக்டரை நான்தான் பண்ணனும் என்பதில் ரொம்பவே உறுதியா இருந்தார். நானும் அவர் நம்பிக்கையைக் காப்பாத்துற மாதிரி நடிச்ச திருப்தி. நான் படம் முழுவதும் நடிச்சிருந்தா கூட அவ்ளோ பெயர் வாங்கிருக்க மாட்டேன். என்னை உலகம் முழுக்க தெரிய வச்சிடுச்சு… அந்த ஒரு ஷாட்!” என்கிறார் அமிர்தலிங்கம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.