ஆளுநர்களின் நடவடிக்கை குறித்து விவாதிக்க விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் சந்திப்பு: டெல்லிக்கு வெளியில் நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: ஆளுநர்களின் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க, பாஜக அல்லாத எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் சந்திப்புக் கூட்டம் விரைவில் டெல்லிக்கு வெளியில் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முடித்துவைத்து, அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவித்திருந்தார். ஆளுநரின் முடிவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு, மேற்கு வங்க முதல்வரின் கோரிக்கைபடிதான் சட்டப்பேரவைக் கூட்டம் முடித்து வைக்கப்பட்டதாக ஆளுநர் பதில் அளித்திருந்தார்.

மம்தா பானர்ஜி ஆதங்கம்

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், ஆளுநர்களின் அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைகளைப் பற்றியம், அவர்கள் அதிகாரத்தை அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தும் போக்கைப் பற்றியும், தனது கவலையையும் ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தமுதல்வர்கள் ஒன்றுகூடி சந்திக்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார்.

மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் திமுகவுக்கு உள்ள உறுதிப்பாட்டை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன்.

எதிர்க்கட்சி முதல்வர்களின் சந்திப்புக் கூட்டம் விரைவில் டெல்லிக்கு வெளியில் நடைபெறும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருத்து

மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஒத்திவைத்தது நிர்ணயிக்கப்பட்ட மரபுகள், விதிகளுக்கு எதிரானது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வந்த நிலையில், கூட்டத் தொடரை முடித்து வைப்பதாக ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘மேற்கு வங்க ஆளுநர், அம்மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடரை தள்ளிவைத்த செயல், உயர்ந்தபதவியில் உள்ள அவரிடம் எதிர்பாராததாகும். நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கும் எதிரானதாகும்.

அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க ஆளுநர் மறுப்பு

இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் இந்த பதிவை சுட்டிக் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடுமையான புண்படுத்தும் வகையிலான கருத்துகள், வழங்கப்பட்ட உத்தரவின்உண்மையை உறுதிப்படுத்தியதாக இல்லை. மம்தா பானர்ஜி அரசின் கோரிக்கை அடிப்படையிலேயே சட்டப்பேரவை தள்ளி வைக்கப் பட்டுள்ளது’ என தெரி வித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.