இந்தாண்டின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ| Dinamalar

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, ‘இஸ்ரோ’வின் சார்பில் இந்தாண்டின் முதல் செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இஸ்ரோ சார்பில், இ.ஒ.எஸ்., ௦4 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் மற்றும் இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் நேற்று செலுத்தப்பட்டன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – சி 52 ராக்கெட் வாயிலாக இவை அனுப்பப்பட்டன. ‘கவுன்ட் டவுன்’ முடிந்து, நேற்று காலை 5:59 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட்டது.

சரியாக 17 நிமிடங்களில், செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட இலக்கை சென்றடைந்தன. இஸ்ரோவின் தலைவராக எஸ்.சோம்நாத் பொறுப்பேற்ற பின் செலுத்தப்படும் முதல் செயற்கைக் கோள் இதுவாகும். விவசாயம் மற்றும் காடு வளர்ப்புக்கு மிகப் பெரிய அளவில் உதவும் வகையில், இ.ஒ.எஸ்., ௦௪ செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது.

இது மண்ணின் ஈரப்பதம், நீரியல், வெள்ளம் போன்றவை குறித்த தகவல்களையும், வானிலை தொடர்பான தகவல்களையும் உடனடியாக தரும்.மொத்தம், 1,710 கிலோ எடை உள்ள இந்த செயற்கைக்கோள், பூமியிலிருந்து 529 கி.மீ., தூரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த, 10 ஆண்டுகளுக்கு இதன் ஆயுட்காலம் இருக்கும் என, கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கண்காணிப்பு மையத்துடன், இந்த செயற்கைக்கோள் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு நாட்களில், இந்த செயற்கைக்கோளிடமிருந்து தகவல்கள் வரத் துவங்கும் என, இஸ்ரோ தெரிவித்துள்ளது.இதைத் தவிர, வானிலை தொடர்பான தகவல்களை அளிக்கக் கூடிய இரண்டு சிறிய செயற்கைக்கோள்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பி.எஸ்.எல்.வி., – சி 52, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்படும், 80வது ராக்கெட் ஆகும். மேலும், பி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டின், 54வது பயணமாகும். இந்தாண்டின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.