காதலர் தினத்தை கொண்டாட புதுவையில் குவிந்த காதல் ஜோடிகள்

புதுச்சேரி,
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதற்கிடையே இன்று (திங்கட்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புதுவையில் நேற்று சுற்றுலா பயணிகள், காதலர்கள் குவிந்தனர். இதன்காரணமாக புதுவையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன.

குறிப்பாக புதுச்சேரி நகர பகுதியில் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகள் உலா வருவதை காண முடிந்தது. காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலர்கள் பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்வார்கள். இதற்காக பரிசு பொருட்கள் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள் வருகை காரணமாக நேற்று புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு, பழைய துறைமுக பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.
புதுச்சேரி நகர பகுதியில் நேற்று ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி வந்த காதல் ஜோடிகள் நகரின் ஒய்ட் டவுன் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் வரைந்துள்ள ஓவியங்களின் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரியில் நேற்று சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.