செல்போன் தொடர்புகளால் சீரழிந்த வாழ்க்கை- 2 சிறுமிகளை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்

சென்னை:

கொரோனா பரவலுக்கு பிறகு மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே நடைபெற்று வந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போதுதான் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது.

இந்த ஆன்லைன் வகுப்புகள் செல்போன்கள் மூலமே நடத்தப்பட்டன. இதனால் மாணவ- மாணவிகளின் கைகளில் எப்போதும் செல்போன்கள் தவழ்வது தவிர்க்க முடியாததாகவே மாறிப்போய் இருந்தது.

இதனை பயன்படுத்தி மாணவ செல்வங்கள் தவறான வழிகளில் செல்வதும் தற்போது அதிகரித்துள்ளது. செல்போன்கள் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பிறகு மாணவிகள் பலர் வாலிபர்களின் காதல் வலையில் விழுந்து தங்களது வாழ்க்கையை சீரழித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் ஒரே நாளில் 2 மாணவிகள் வாலிபர்களால் ஏமாற்றப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். 21 வயது வாலிபரான இவருக்கு செல்போன் மூலமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

செல்போனில் தொடர்ந்து சிறுமியிடம் பேசி வந்த அந்தோணிராஜ், அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி மயக்கி உள்ளார். அடிக்கடி பெசன்ட்நகரில் இருந்து அம்பத்தூர் பகுதிக்கு வந்து சிறுமியை ரகசியமாகவும் அந்தோணி ராஜ் சந்தித்து பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி சிறுமியை திடீரென காணவில்லை.

இதுதொடர்பாக அம்பத்தூர் மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை பெசன்ட்நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து சிறுமியை கடத்தி சென்ற அந்தோணி ராஜை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடந்த விசாரணையில் சிறுமியை கடத்தி சென்று யாருக்கும் தெரியாமல் மறைவான இடத்தில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அந்தோணி ராஜ் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று மயிலாப்பூர் பகுதியிலும் 14 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூரை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் பக்கத்து தெருவை சேர்ந்த சிறுமியிடம் செல்போனில் பேசி பழகி உள்ளார். இரவில் நீண்ட நேரம் சிறுமியுடன் பேசிய கார்த்திக், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை பேசி ஏமாற்றி இருக்கிறார்.

இதனை நம்பி சிறுமியும் வாலிபர் அழைத்த இடத்துக்கெல்லாம் சென்றுள்ளார். கடற்கரை பகுதிகளுக்கு அழைத்து சென்று கார்த்திக், சிறுமியிடம் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில் சிறுமி திடீரென காணாமல் போனதை அடுத்து இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வாலிபர் கார்த்திக் சிறுமியை கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கார்த்திக் இருக்கும் இடத்தை போலீசார் தேடினர். அப்போது துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்று அங்கு அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லையில் கார்த்திக் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். வாலிபர் கார்த்திக்கை கைது செய்தனர். அவர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்திக்கும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி மாணவிகள் பலரை ஏமாற்றி அழைத்து சென்று வாலிபர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுபோன்ற சம்பவங்களுக்கு செல்போன்களே முக்கிய காரணமாக அமைந்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளுக்காக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் செல்போன்களே அவர்களுக்கு ஆபத்தாக முடிந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் தங்களது குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள்? என்பதை கண்காணிப்பது பெற்றோர்களின் கடமை என்றும், அவர்களை கண்டிப்பாக தவறாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.