நீட் உதயமாக காங்கிரஸ் – திமுக காரணமா? – அதிமுக-வின் தொடர் குற்றச்சாட்டும்… எதிர்தரப்பு விளக்கமும்!

“நீட் தேர்வை ரத்துசெய்வதற்குக் கடுமையான முயற்சி மேற்கொண்டோம். இருந்தாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் தேர்வு நடத்தவேண்டிய சூழ்நிலையில் அப்போது அ.தி.மு.க இருந்தது. இப்போதும் நீட் தேர்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இன்று நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்ததற்கு முழுக்க முழுக்க காங்கிரஸும் தி.மு.க-வும்தான் காரணம்.” என அ.தி.மு.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பேசி வருகிறார்கள். “2010-ல் மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணையமைச்சராக தி.மு.க-வைச் சேர்ந்த காந்திசெல்வன் இருந்த காலகட்டத்தில்தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ‘நீட்’ என்ற சொல்லே அப்போதுதான் வந்தது. அப்போதே 2013-ல், அந்தந்த மாநிலங்கள் விருப்பப்பட்டால் நீட் தேர்வை அமல்படுத்திக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைகிறார்கள், எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். இந்தத் தீர்ப்பு அப்படியே தொடர்ந்திருந்தால், இப்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இதை முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுகையில் குறிப்பிடவில்லை. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸால் மறுசீராய்வு மனு போடப்பட்டதன் விளைவாகத்தான், 2017-ல் நீட் தேர்வு வந்தது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த அனைவரது ஒருமித்த கருத்தாக நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும். இதைச் சட்டரீதியாக அணுகுவதற்கு அ.தி.மு.க துணை நிற்கும்.” என பா.ஜ.க தலைவர்களும், நீட் தேர்வுக்குக் காரணம் தி.மு.க – காங்கிரஸ் தான் எனத் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சிகளின் பிராசரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது நீட் தேர்வு. இரண்டு தரப்பும் மாறி… மாறி நீட் தேர்வு விவகாரத்தில் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியும் உண்மையும் என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்…

Also Read: நீட் விலக்கு மசோதா: `நீட் என்பது தேர்வு இல்லை… பலிபீடம்!’ – முதல்வர் ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்

நீட் தேர்வு கொண்டு வந்ததாக தி.மு.க மீது ஏன் குற்றம்சாட்டப்படுகிறது என அ.தி.மு.க சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர், இன்பதுரையிடம் கேட்டோம்.

“தி.மு.க நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க எம்.பி காந்திசெல்வன் நீட் மசோதாவைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது என்ன செய்து கொண்டிருந்தார் ஸ்டாலின்? தமிழக மக்களுடைய காதில் பூ சுற்ற எண்ணாதீர்கள். நீட் என்கிற விஷ விருட்சத்திற்கான விதை காங்கிரஸ் ஆட்சியிலிருந்த 2010-ம் ஆண்டில்தான் விதைக்கப்பட்டது. அன்றைய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தது திமுக! இதை மறுக்கமுடியுமா? மத்திய சுகாதாரத்துறையால் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது சுகாதாரத்துறையின் இணை அமைச்சராக இருந்தவர் யார்? தி.மு.க-வைச் சேர்ந்த காந்திசெல்வன். 2010-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டத்துக்கு முதலில் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அப்போது ஓடோடி சென்று மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்து உச்ச நீதிமன்ற அனுமதியைப் பெற்றது காங்கிரஸ் அரசு. அப்போது காங்கிரஸ் அரசுக்கு முட்டு கொடுத்துக்கொண்டிருந்த தி.மு.க இதைத் தடுத்திருக்கலாம் அல்லவா? 2016-ல் தமிழ்நாட்டில் நீட் தேர்வு வந்தபோது தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து புரட்சித் தலைவி அம்மா ஓராண்டு விலக்குப் பெற்றார். அதற்கடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்தது.

இன்பதுரை

சட்ட ரீதியிலும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப் பெறவும் அ.தி.மு.க அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்து, இந்தியாவின் தலைமை வழக்கறிஞரிடம் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்க அளிக்கலாம் எனச் சட்ட கருத்துரு பெறப்பட்டது. அதன்பின் மத்திய சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்ற நிலை. அவர்களும் ஒப்புதல் அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தார்கள்.” என்றவர்…

“காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீட் தொடர்பான தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு எதிராக ஓர் உத்தரவைப் பெற்று நமது அனைத்து முயற்சிகளையும் சவப்பெட்டியில் போட்டு ஆணி அடித்துவிட்டார். இதனால் நீட் விலக்கு பெறுவதில் சட்ட ரீதியில் தீர்வு காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால்தான் தமிழ்நாட்டுக்குள் நீட் வந்தது. எனவேதான் நீட் தேர்வுகளுக்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ்தான் காரணம் என அடித்துச் சொல்கிறோம். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்த போது அதைக் கடுமையாக எதிர்த்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. இது வரலாறு. மாநிலங்களவையில் விவாதத்துக்கு வந்த போது தி.மு.க உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீட் தேர்வு மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்புக்கு விட்ட போது செக்க்ஷன் வாக்கெடுப்புக்கு விடவேண்டும் என்று கேட்டாவது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. ஆக வசம்பு வைத்துத் தேய்த்தாலும் கூட வாயே பேசமாட்டேன் என வாய்மூடி இருந்துவிட்டு இப்போது நீட் தேர்வு குறித்து தி.மு.க-வினர் முதலைக் கண்ணீர் வடித்து வருகிறார்கள். நாங்கள் தாக்கல் செய்தது மசோதாதான் சட்டமில்லை எனச் சொல்கிறார்கள். நீட் தேர்வு என்பது ஒரு விஷச்செடி என்பதை உணர்ந்து கொண்டு அப்போதே காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றுவிடுவோம் என்று தி.மு.க மிரட்டி காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறிருப்பார்களேயானால் இப்போது இவ்வளவு சிக்கலுக்குத் தமிழக மாணவர்கள் ஆளாக வேண்டிய சூழல் வந்திருக்காதே!

நீட் தேர்வு மையம்

நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரியாமல் அந்த மசோதாவைக் கொண்டு வந்து, அதை நிறைவேற்றக் காங்கிரஸ் கட்சிக்கு முட்டுக்கொடுத்துவிட்டு தமிழர் நலனை அடகு வைத்துவிட்டு இப்போது விலக்குப் பெறுகிறோம் என நாடகம் ஆடுகிறார்கள். அதைவிட மாணவர்களின் கல்லறையின் மீது நின்று தி.மு.க அரசியல் செய்வதைப் பார்க்கும்போது அருவெறுப்பாக இருக்கிறது” என்றார்.

Also Read: “நீட் தேர்வுக்கு முழுக்க முழுக்க காங்கிரஸும் திமுக-வும்தான் காரணம்!”- எடப்பாடி பழனிசாமி

தி.மு.க மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம். “நீட் தேர்வு என்பது தி.மு.க இருந்த போது சட்டமாக இருக்கவில்லை. இந்த அறிவு அ.தி.மு.க-வில் யாருக்குமே இல்லை. இதற்கு முன் ஆல் இந்தியா ப்ரி மெடிக்கல் டெஸ்ட் இருந்தது. 1984-லிருந்து இருக்கிறது. அதையொட்டித்தான் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் இங்கே நுழைவுத் தேர்வு நடத்தினார்கள். இந்த தேர்வு ஒன்றிய அரசு நடத்தும் கல்லூரிகளுக்கும் ஒன்றிய அரசு இட ஒதுக்கீடான 15 சதவிகிதத்துக்கும் என இருந்தது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் வந்த பிறகு அவர்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு நடத்தினார்கள். எனவே உச்ச நீதிமன்றம் எல்லாவற்றுக்கும் ஒன்றாக ஒரே பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதைப் பேரை மாற்றித்தான் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா நீட் தேர்வு என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. இது சட்டமல்ல. மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா கொண்டு வந்த ஒரு நடைமுறை. அதைச் சட்டமாக்கியது பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் தான். தி.மு.க – காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நடைமுறையிலும் மாநிலங்கள் தேவைப்பாட்டால் நீட் தேர்வில் இணைந்து கொள்ளலாம் என்றுதான் இருந்தது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

2016-ல் அரசியலமைப்பில் 10-டி என்ற பிரிவைச் சேர்த்து மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்பில் யாரைச் சேர்க்கலாம் என்ற அதிகாரம் கொடுக்கப்பட்டு அது சட்டமாக இயற்றப்பட்டது. இதன் பிறகுதான் நீட் சட்டமாக மாறியது.” என்றவர்…

“தி.மு.க மத்தியில் அதிகாரத்தோடு இருந்தவரை எந்த இடத்திலும் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டதே இல்லை. நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று சங்கல்ப் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை நிறுவனம் நீதிமன்றத்தை அணுகுகிறது. அதன்பின்னர் தான் நீட் தேர்வை இந்தியா முழுவதும் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. பா.ஜ.க உடன் கூட்டணியிலிருந்து கொண்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் அனுமதித்தது அ.தி.மு.க. 2016-இல் நீட் தேர்வைக் கொண்டு வரப்பட்ட போது அன்றைக்கு இருந்த அ.தி.மு.க அரசு ‘தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லை எனச் சட்டம் இயற்றியிருக்கிறோம். எனவே நீட் தேர்விலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ எனக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ‘நீட் தேர்வை நடத்துவதற்குரிய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ பாடங்களைப் பயிற்றுவிக்க ஓராண்டு மட்டும் எங்களுக்குக் கால அவகாசம் வேண்டும்’ என ஏன் கேட்டு வாங்கினார்கள்?

நீட் எதிர்ப்பு போராட்டம்

சட்டம் இயற்ற விட்டது அ.தி.மு.க., உச்ச நீதிமன்றத்தில் நிரந்தர விலக்குக் கோரியிருக்க வேண்டும். அதைக் கேட்காமல் விட்டது அ.தி.மு.க. இப்படி பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் இணைந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பச்சை துரோகத்தைச் செய்துவிட்டு எங்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.