ஆளுநர்களுக்கு எதிரான தேசிய இயக்கம்; முன்னெடுக்கும் மம்தா, ஸ்டாலின்?! -அதன் தாக்கம் எப்படியிருக்கும்?

மேற்குவங்க முதல்வர் மம்தா பானார்ஜிக்கும், அந்த மாநிலத்தின் ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே நீண்ட நாள்களாக உரசல்கள் இருந்துவருகின்றன. இந்த நிலையில், மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், அரசியலமைப்புச் சட்டத்தின் 174-வது பிரிவு தனக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிப்ரவரி 12-ம் தேதி முதல் மேற்குவங்க சட்டசபையை முடக்குவதாக உத்தரவிட்டார். ஜக்தீப் தன்கரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் விவாதங்களைக் கிளப்பியது.

இதையடுத்து, மேற்குவங்க ஆளுநரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தனது ட்விட்டர் பக்கத்தில், “மேற்குவங்க ஆளுநர் சட்டசபையை முடக்கியிருப்பது, விதிகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானதாக இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவதற்கு மாநிலத்தின் தலைவர் என்ற நிலையிலிருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

மம்தா பானர்ஜி, ஜகதீப் தன்கர்

Also Read: “சட்டப்பேரவையை முடக்கச் சொன்னதே மம்தா தான்!” – முதல்வர் ஸ்டாலினுக்கு மேற்கு வங்க ஆளுநர் பதில்

இதற்கிடையில் மேற்குவங்க ஆளுநரின் நடவடிக்கையைப் பிரசாரத்தில் சுட்டிக்காட்டிப் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மேற்குவங்கத்தில் என்ன நடந்தது என்பதை ஸ்டாலின் பார்க்க வேண்டும். அங்கு, அந்த மாநிலத்தின் ஆளுநர் சட்டசபையை முடக்கியிருக்கிறார். தமிழ்நாட்டிலும் அதே நிலைமை எதிர்காலத்தில் வரலாம்” என்று பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு, “தமிழ்நாடு சட்டசபையை முடக்க நினைக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் பகல் கனவு பலிக்காது. தனது பேச்சின் மூலம் அ.தி.மு.க-வின் விருப்பத்தை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்” என்று கூறினார்.

இந்த நிலையில், மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் “11-ம் தேதி மாலை, மேற்குவங்க சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சரவையிலிருந்து, அடுத்த பேரவைக் கூட்டத் தொடர் மார்ச் 2-ம் தேதி தொடங்கப்போவதாகத் தெரிவித்தனர். எனவே, மேற்குவங்க அரசு கேட்டுக்கொண்டதை அடுத்துத்தான் சட்டசபை முடித்துவைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் கடுமையான அவதானிப்புகள் உண்மையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்குப் பதிலளித்திருந்தார். இதையடுத்து பா.ஜ.க-வினர் பலரும், “என்ன நடந்தது என்றே தெரியாமல் மேற்குவங்க விவகாரத்தில் கருத்துக் கூறியிருக்கிறார் ஸ்டாலின். சட்டப்பேரவை மார்ச் 2-ம் தேதி நடைபெறும் என்று மாநில அரசு சொன்னதால்தான், அங்கு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். மேற்குவங்க முதல்வர் மம்தாவே அமைதியாக இருக்கும்போது, முந்திக் கொண்டு தவறான கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார் ஸ்டாலின். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்திவருகின்றனர்.

பிப்ரவரி 13-ம் தேதி அன்று ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புக்குரிய சகோதரி மம்தா பானர்ஜி, என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், அரசியலமைப்பை மீறிய ஆளுநர்களின் நடவடிக்கைகள் பற்றியும், அவர்கள் அதிகாரத்தை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்துவது பற்றியும் தனது கவலையையும் ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்றுகூடிச் சந்திக்கலாம் எனவும் அவர் கூறினார். மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கும் உறுதிப்பாட்டினை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன். எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்புக் கூட்டம் விரைவில் நடைபெறும்!” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஸ்டாலின், மம்தா பானர்ஜி

Also Read: மம்தா Vs காங்கிரஸ்… தேசிய அரசியலில் யார் பக்கம் நிற்பார் ஸ்டாலின்?!

இதையடுத்து, மம்தாவும் ஸ்டாலினும் இணைந்து மாநில ஆளுநர்களுக்கு எதிரான தேசிய இயக்கம் ஒன்றைத் தொடங்கப்போவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அப்படி, எதிர்க்கட்சிகள் இணைந்து ஆளுநருக்கு எதிரான தேசிய இயக்கம் தொடங்கப்பட்டால், அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.

இது குறித்துப் பேசும் தேசிய அரசியல் பார்வையாளர்கள், “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தன்னை தேசிய அளவில் முக்கியத் தலைவராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மம்தாவின் திட்டம். இந்திய அளவில், பா.ஜ.க-வுக்கு எதிராகச் செயல்படும் தவிர்க்க முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இவர்கள் இருவரும் தேசிய அரசியலில் தங்களை முன்னிறுத்திக் கொள்ளவே ஆளுநர்கள் தொடர்பான அரசியலைக் கையிலெடுத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. மம்தாவும், ஸ்டாலினும் இணைந்து ஆளுநர்களுக்கு எதிராக இயக்கம் ஒன்றைத் தொடங்கினால், எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருக்கும் அனைத்து மாநில முதல்வர்களும் இதற்கு ஆதரவு கொடுப்பார்களா என்பது சந்தேகமே. அப்படியிருக்கையில் அந்த இயக்கம் எந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!” என்கிறார்கள்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.