ரஷ்யாவை மட்டுப்படுத்த உக்ரைனை ஒரு கருவியாக அமெரிக்கா பயன்படுத்துகிறது: புதின் சரமாரி குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷ்யாவை மட்டுப்படுத்துவதற்காகவே உக்ரைன் பிரச்சினையை அமெரிக்கா ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். இதில், அமெரிக்காவின் நட்பு நாடுகளும் கூட்டாளிகளாக இணைந்துள்ளதாக அவர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், “உக்ரைனை மேற்கத்திய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரக் கூடாது என்ற கோரிக்கையை நாம் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளிடம் கொடுத்துள்ளோம். ஆனால், அதற்கு அவர்கள் அளித்த பதில் எவ்விதத்திலும் திருப்திகரமாக இல்லை. ரஷ்யாவின் அடிப்படை கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவது அப்பட்டமாக தெரிகின்றது. அமெரிக்கா எப்போது உக்ரைனின் பாதுகாப்பில் கவலை கொள்வதாகக் கூறுகிறது. ஆனால், அது உக்ரைனை நம் நாட்டினைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாகப் பார்க்கிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அம்சங்கள் உட்பட அனைத்துக் கோரிக்கைகளையும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பரிசீலித்தால் பிரச்சினைக்கு இப்போதே முடிவு வரும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் அதைச் செய்வோம்” என்றார்.

உக்ரைன் விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே கொளுந்துவிட்டு எரியும் சூழலில் ரஷ்ய அதிபரின் இந்தப் பேச்சு கவனம் பெற்றுள்ளது. இந்தப் பேச்சு மேற்கத்திய நாடுகள் அஞ்சுவது போல் உக்ரைன் மீதான படையெடுப்பு அவ்வளவு சீக்கிரம நடந்துவிடாது, இன்னும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்புள்ளது என்பதையே உணர்த்துகிறது.

உக்ரைன் ஏன் சர்ச்சையானது? – சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

இந்த நிலையில் ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்துக்கு மேற்பட்ட படைகளை நிறுத்தியுள்ளது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷ்யா கூறுகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாக குற்றம்சாட்டுகிறது.

“உக்ரைன் நேட்டோ படைகள் இணைந்தால் நம் ராணுவம் நேட்டோவை தான் எதிர்கொள்ள வேண்டுமா?” என்று புதின் கேள்வி எழுப்பிவருகிறார். “உக்ரைன் பாதுகாப்பைவிட ரஷ்ய வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கம்” என்றும் அவர் கூறுகிறார். “உக்ரைனுடம் நம்மை மோதவிட்டு அதன் மூலமாக தனது ஐரோப்பிய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு நம் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்து நமது வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கம்” என்றார்.

என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை? – ரஷ்ய அதிபர் புதின் இப்படி சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைக்க, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, “நாங்கள் உக்ரைன் விவகாரத்தில் எங்களின் நம்பிக்கையை மட்டும் திணிக்கவில்லை. உக்ரைன் நேட்டோவில் இருக்க வேண்டுமா இல்லையா என்பதை எல்லா உறுப்பு நாடுகளும் சேர்ந்துதான் முடிவு செய்யும். தூதரக பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடக்க வேண்டுமென்றால், எல்லையிலிருந்து உக்ரைனை அச்சுறுத்தும் படைகளை ரஷ்யா திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

தலையில் துப்பாக்கி வைக்கக் கூடாது: இதற்கிடையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “உக்ரைன் எல்லையில் படைகளை நிறுத்தியிருப்பது, அவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவதற்கு சமம். இந்த மிரட்டலோடு பேச்சுவார்த்தை சாத்தியப்படாது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அது ராணுவ ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் பேரழிவை உண்டாக்கும். உக்ரைனில் உள்ள மக்கள் ரத்தம் தெறிக்க எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்” என்றார்.

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் போலந்து அதிபர் வொளோடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் தலைநகர் கியவுக்கு சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ரஷ்யா படையெடுத்தால், உக்ரைனுக்கு போலந்து ஆயுதங்கள், பொருளாதார உதவி, மனிதாபிமான உதவி எனப் பலவகையிலும் உதவலாம் எனத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.