7 மாநிலங்களில் 14 பெண்களை மணந்தவர் கைது: ஒடிசா போலீஸ் வலையில் சிக்கியதன் பின்னணி

புவனேஸ்வர்: ஒடிசாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 48 ஆண்டுகளில் 7 மாநிலங்களைச் சேர்ந்த 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. கடைசியாக அவர் திருமணம் செய்த பெண் அந்த நபரின் தில்லுமுல்லு போக்கை அறிந்து போலீஸில் புகார் கூற, போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். ஒடிசா மாநிலம் கேந்தரப்பா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு இப்போது வயது 60-ஐ கடந்துள்ளது.

அவருடைய திருமண நாடகங்கள் குறித்து ஒடிசா போலீஸார் கூறியது: ‘காமேஷ் சந்திர ஸ்வைன், இதுதான் அந்த நபரின் பெயர். 1982-ல் இவர் முதன்முதலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் 2002-ல் இவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். முதல் 2 திருமணங்கள் வாயிலாக மட்டும் இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன்கள் இருவரும் மருத்துவர்கள் என காமேஷ் கூறியுள்ளார். மேலும், அவரது இரண்டாவது மனைவி ஒடிசாவில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் விசாரித்து வருகிறோம்.

2002 முதல் 2020 வரை இவர் பல்வேறு திருமண ஒருங்கிணைப்பு இணையதளங்கள் வாயிலாக பல பெண்களை நட்பு வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளார். அப்போதுதான் 6 பேரை திருமணம் செய்துள்ளார். இவர் கடைசியாக திருமணம் செய்துகொண்ட பெண் டெல்லியில் பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவருக்கு எப்படியோ இவரது முந்தைய திருமணங்கள் பற்றி தெரியவந்துள்ளது. அவர் அளித்தப் புகாரின் பேரிலேயே ஒடிசாவில் அந்த நபரை கைது செய்தோம்.

பொதுவாக, இவர் நடுத்தர வயது கொண்ட தனியாக வசிக்கும் பெண்களை மட்டுமே குறிவைத்திருக்கிறார். அதுவும் குறிப்பாக விவாகரத்தான பெண்களைக் குறிவைத்துள்ளார். இவர்களைப் பற்றிய தகவல்களை மேட்ரிமோனியல் இணையதளங்களில் சேகரிப்பார். பின்னர் அவர்களுடன் நட்பாகி, காதலிப்பதாக சொல்லி திருமணம் செய்து கொள்வார். அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு பணம், பொருளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிடுவார். தன்னை மருத்துவர் என சொல்லிக் கொண்டே எல்லா பெண்களையும் அவர் அணுகியுள்ளார்.

மாற்று மருத்துவம் பயின்றதாகக் கூறுகிறார். அவரது சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. காமேஷின் வலையில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என அதிகம் படித்த பெண்களே ஏமாந்து விழுந்துள்ளனர். துணை ராணுவப் படையில் உள்ள பெண்ணைக் கூட இவர் ஏமாற்றியிருக்கிறார். இவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள், டெல்லி, பஞ்சாப், அசாம், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ளனர். இவரது முதல் இரு மனைவிகள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள்’ என்று புவனேஷ்வர் துணை ஆணையர் உமாஷங்கர் தாஸ் தெரிவித்தார்.

48 ஆண்டுகளாக பெண்களை ஏமாற்றி வந்த காமேஷ் சந்திர ஸ்வைன் கைது ஒடிசாவில் விவாதப் பொருளாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.