கனடாவில் அவசர நிலை பிரகடனத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

ஒட்டாவா,
கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி டிரைவர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது.
அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி டிரைவர்கள் கடந்த மாதம் 29-ந்தேதி லாரிகளுடன் தலைநகர் ஒட்டாவாவில் குவிந்து போராட்டத்தை தொடங்கினர். போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளுடன் ஒட்டாவாவில் உள்ள சாலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்தனர்.
போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை.
மாறாக லாரி டிரைவர்களின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியதால் ஒட்டாவாவில் இருந்து நாடு முழுவதற்கும் போராட்டம் பரவியது.
இந்த போராட்டம் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. குறிப்பாக, லாரி டிரைவர்களின் இந்த போராட்டத்தை அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்க வேண்டும் என கனடாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் லாரி டிரைவர்களின் போராட்டம் 3-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
ஒட்டாவாவில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஜஸ்டின் ட்ரூடோ இதனை அறிவித்தார். நாட்டில் அவசர நிலை உனடடியாக அமலுக்கு வருவதாகவும், அடுத்த 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கும் எனவும் அவர் கூறினார்.
அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் போராட்டக்காரர்களை சிறையில் அடைக்கவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் இன்றி கோர்ட்டு உத்தரவுகள் இன்றி, போராட்டங்களில் தொடர்புடையோரின் வங்கிக் கணக்குகளை வங்கிகளே முடக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. அதோடு போராட்டத்தில் ஈடுபடுவோரின் வாகன காப்பீடும் ரத்து செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் 1988-ல் நிறைவேற்றப்பட்ட அவசரநிலை சட்டத்தை அமல்படுத்த கடினமான சட்ட தடைகளை கடக்க வேண்டும். கனடா மக்களின் வாழ்க்கை, உடல்நலன் அல்லது பாதுகாப்பு ஆகியவற்றுக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான அவசர மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் மட்டுமே இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும். சட்ட ரீதியான போராட்டங்கள் அவசரநிலையை அமல்படுத்த தகுதி பெறாது.
எனவே லாரி டிரைவர்களின் போராட்டத்துக்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.