கனடா – அமெரிக்கா எல்லை அருகே பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பம்

நியூயார்க்: கனடா – அமெரிக்கா எல்லை அருகே 4 பேர் அடங்கிய இந்தியக் குடும்பத்தினர் பனியில்உறைந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இந்தியாவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பல்தேவ்பாய் பட்டேல் (39).இவரது மனைவி வைஷாலிபென் ஜெகதீஷ் குமார் (37). இவர்களுக்கு மகள் விஹாங்கி ஜெகதீஷ்குமார் (11), மகன் தர்மிக் ஜெகதீஷ் குமார் (3) ஆகியோர் இருந்தனர். இவர்கள் 4 பேரும் ஒரு காரில் அமெரிக்காகனடா எல்லைப் பகுதியில் பனியில் உறைந்த நிலையில் சடலங்களாக கடந்த 22-ம் தேதி கண்டெடுக்கப்பட்டனர்.

கனடா மற்றும் அமெரிக்க எல்லை மாகாணங்கள் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கனடா நாட்டின் எமர்சன் எல்லைப்பகுதியில் வாகனம் ஒன்றில் உயிரிழந்த நிலையில் இவர்கள் 4 பேரின் உடல்களை மனிடோபா எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் மனிடோபா மாகாணத்தில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இறந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுகிறது. அவர்களை வேனில் அடைத்து வைத்து அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற மனித கடத்தல் கும்பலை சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவரையும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

எல்லையை எளிதாக கடந்து விடலாம் என்று நினைத்து கிளம்பிய அவர்கள் பனியில் சிக்கியிருக்கலாம் என்று கனடா போலீஸார் தெரிவித்துள்ளனர். எல்லைப்பகுதியில் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரிக்கு கீழ் சென்று விட்ட நிலையில் பனியில் உறைந்து அவர்கள் உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு இந்திய தூதர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக கனடா போலீஸாரும் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.