கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடலாம்- மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. அவ்வகையில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடலாம் என கூறி உள்ளார். 
‘புதிய பாதிப்புகள், சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டுப்பாடுகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மதிப்பாய்வு செய்து திருத்தவோ அல்லது முடிவுக்குக் கொண்டு வருவதோ பயனுள்ளதாக இருக்கும்.
ஜனவரி 21ம் தேதி முதல் கொரோனா தொற்று குறைந்துள்ளது. கடந்த வாரம், சராசரி தினசரி பாதிப்பு 50,476 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 27,409 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தினசரி பாதிப்பு விகிதம் 3.63 சதவீதமாக உள்ளது.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கொரோனா பாதிப்பு நிலவரத்தை அந்தந்த வரம்புகளுக்குள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தினசரி நோய்த்தொற்றின் பரவலை மதிப்பாய்வு செய்ய வேண்டும். 
பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுதல் ஆகிய ஐந்து அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்’ என்றும் மத்திய  சுகாதாரத்துறை செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.