பங்குச் சந்தை ஊழல்: இமயமலை சாமியாரும் இமாலய ஊழலும்

பங்குச் சந்தை என்றாலே சாதாரண மக்களுக்கு மர்மம் நிறைந்த இடம். அங்கு எப்படி வர்த்தகம் நடக்கிறது, எவ்வளவு பணம் புரள்கிறது, யார் சம்பாதிக்கிறார்கள், யார் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதெல்லாம் த்ரில்லர் வகைப் படங்களுக்கு இணையானது. யார் யோக்கியர், யார் அயோக்கியர் என்பதை இயல்பாகக் கண்டுபிடிக்க முடியாது.

இந்தியப் பங்குச் சந்தைகளின் ஒழுங்காற்று மையமான
செபி
கடந்த வெள்ளியன்று 190 பக்க அளவில் ஒரு புகார் உத்தரவை வெளியிட்டிருக்கிறது. அதன் மையமான விஷயம் என்னவென்றால் தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகியும் மேலாண்மை இயக்குநருமான
சித்ரா ராமகிருஷ்ணா
எனும் பெண்மணி ஏதோ ஒரு இமயமலை சாமியாருடன் சேர்ந்து மாபெரும் ஊழல் செய்திருக்கிறார் என்பதே.

இந்திய மூலதனச் சந்தையில் கிட்டத்தட்ட 70% வர்த்தகம்
தேசியப் பங்குச் சந்தை
வர்த்தகத்தின் மூலம்தான் நடக்கிறது. அந்த வர்த்தகத்தின் திட்டமிடல்கள், கொள்கைகள், அதிகாரிகள், பதவிகள், இதர ரகசியங்கள் சித்ரா ராமகிருஷ்ணாவிற்கும் அடையாளம் தெரியாத இமயமலை சாமியாருக்கும் இடையே மின்னஞ்சல் மூலம் பரிமாறப்பட்டிருக்கின்றன.

சித்ரா தனது விளக்கத்தில் சாமியாரோடு மின்னஞ்சல் தொடர்பு மட்டும் இருந்ததாகவும், நேரில் சந்தித்தத்தில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கங்கைக் கரையில் அந்த சாமியாரை 20 வருடங்களுக்கு முன்பு சந்தித்திருப்பதும், செஷல்ஸ் தீவில் அவரோடு கடலில் குளித்ததையும் மின்னஞ்சல் மூலம் செபி அம்பலப்படுத்தியிருக்கிறது.

அந்த மர்ம சாமியார் பினாமி பெயரில் பங்குச் சந்தை தரகராக இருந்திருக்கிறார். அவரது அறிவறுத்தலின் பெயரில் ஆனந்த சுப்ரமணியன் என்பவரை தேசியப் பங்குச் சந்தையன் முக்கியப் பதவி – தலைமை மூல உத்தி அதிகாரி- ஒன்றில் அமர்த்தியிருக்கிறார் சித்ரா. அவருக்கு வருட சம்பளம் 1.38 கோடி ரூபாய். இதற்கு முன் இதே ஆனந்த சுப்ரமணியன் வேறு நிறுவனத்தில் பணியாற்றியபோது அவருடைய வருட ஊதியம் வெறும் 15 இலட்சம் மட்டுமே. கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு ஊதிய உயர்வு. மேலும் இந்த ஆனந்த் என்பவர் குழு அமலாக்க அதிகாரி என்ற பொறுப்பிலும் பணி உயர்த்தப்பட்டிருக்கிறார். அவருக்கு ஐந்து நாட்கள் வேலை என்றாலும் அவர் மூன்று நாட்கள் மட்டும் நினைத்த நேரத்தில் வந்து போவார். எல்லாம் சாமியாரின் ஆசீர்வாத உத்தரவு.

சித்ரா பதவியில் இருந்த காலத்தில் தினசரி 49 கோடி வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார். இதன் மதிப்பு தினசரி 64 ஆயிரம் கோடி ரூபாய். இத்தனை ஆயிரம் கோடி வர்த்தகத்தையும் சித்ரா மூலம் கட்டுப்படுத்தி ஊழல் செய்தும் செய்ய வைத்தும் இருக்கிறார் அந்த சாமியார்.

2013,2016ஆம் ஆண்டுகளுக்கிடையில் தேசியப் பங்குச் சந்தையின் பொறுப்பில் இருந்திருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன். இப்போது இரண்டு கருத்துகள் ஊகிக்கப்படுகின்றன. சித்ராவே சாமியார் மாதிரி ஒரு பினாமி பெயரில் இயங்கினாரா அல்லது சாமியார் சிபாரிசு செய்த ஆனந்த சுப்ரமணியன்தான் அந்த சாமியாரா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. சித்ரா பற்றிய புகார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தாலும் இத்தனை ஆண்டுகளாக விசாரித்த செபி இப்போதுதான் புலனாய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களை பெகாசஸ் மூலம் உளவு பார்க்கும் நாட்டில் பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் பங்குச் சந்தையில் நடந்த ஊழலை விசாரிக்க இத்தனை வருடங்கள். சரி, இந்த விசாரணை முடிவில் செபி என்ன உத்தரவு போட்டிருக்கிறது தெரியுமா?

ஏன் நடவடிக்கை இல்லை?

சித்ராவுக்கு மூன்று கோடி அபராதம், ஆனந்த சுப்ரமணியனுக்கு 2 கோடி ரூபாய் அபராதம். மற்றபடி கிரிமினல் பிரிவு வழக்குகளோ, நிறுவன விதி மீறல் குற்ற வழக்குகளோ இல்லை. பாஜக ஆசைப்பட்டபடி தஞ்சை மாணவி லாவண்யா மரணத்திற்கு சிபிஐ விசாரணை என்றால் செபியின் விசாரணைக்கு சிபிஐ ஏன் நியமிக்கப்படவில்லை. காரணம் இதில் சம்பந்தப்பட்டவர் இந்து சாமியார் என்பதாலா?

அந்த இமாலய சாமியாரின் மின்னஞ்சல் முகவரி [email protected]. அந்த மின்னஞ்சலில் ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம் மூன்றும் இருக்கிறது. இந்த மூன்று வேத சாமியார்தான் மூன்று வருடங்களாக தேசியப் பங்குச் சந்தையை இயக்கியிருக்கிறார். இந்த சாமியார் இமயமலையில் எங்கோ வாழும் ஒரு ஆன்மீக சக்தி என்று வருணித்திருக்கிறார் சித்ரா. பொதுவில் பங்குச் சந்தையில் நன்றாக வேலை செய்வது குறித்து நிபுணர்களுக்கிடையே இயல்பாக பேசிக்கொள்வது வழக்கம். அப்படித்தான் சாமியாருடன் பேசினேன் என்கிறார் சித்ரா. சரி சாமியாருக்கும் நிபுணருக்கும் என்ன சம்பந்தம்? அவர் சொன்னபடி ஆட்களைப் போடுவது, திட்டமிடுவது எல்லாம் இயல்பா, ஊழலா?

இத்தனைக்கும் சித்ரா பதவியில் இருந்த மூன்று ஆண்டு காலத்தில் பல நிறுவனங்கள் அவரது செயல்பாடு குறித்தும், ஆனந்த சுப்ரமணியன் குறித்தும் செபிக்கு புகார்கள் அளித்துள்ளன. அதன் பிறகே செபி மெல்ல விசாரித்து ஆறு வருடங்களுக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் தேசியப் பங்குச் சந்தை, செபிக்கு ஒரு கடிதம் அளித்திருக்கிறது. அதில் மனித உளவியலில் நன்கு பரிச்சயம் கொண்ட ஆனந்த் சுப்ரமணியன்தான் அந்த சாமியார் என்றும் அவரே சாமியார் பெயரில் சித்ராவை கைப்பாவையாக நடத்தியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறது. இந்த கைப்பாவைத்தனத்தில் பக்தி, ஆன்மீகம், வேதம் எல்லாம் இருக்கிறது. எதற்காக? பங்குச் சந்தையில் ஊழல் செய்வதற்காக!

சித்ரா தனது மின்னஞ்சலில் தேசியப் பங்குச் சந்தையின் ஐந்தாண்டுத் திட்டங்கள், முன் ஊகித்தல்கள், பங்குகளுக்கான கழிவு விகிதம், வணிகத் திட்டங்கள், என்எஸ்இ-இன் கூட்ட நிகழ்ச்சி நிரல்கள், என்எஸ்இ ஊழியர்களின் பணி தரப்படுத்தல்கள் அத்தனையையும் அனுப்பியிருக்கிறார். இவையெல்லாம் எந்த நாட்டிலாவது நடக்குமா?

இது மட்டுமல்ல பங்குச் சந்தை வர்த்தகத்தின் அன்றாட நடவடிக்கையிலும் சாமியார் சித்ரா மூலம் பங்கு பெற்றிருக்கிறார். அந்த மின்னஞ்சல்களில் சாமியார் சித்ராவின் சிகை அலங்காரத்தை வருணிக்கிறார். தமிழ் பக்திப் பாடல்களை சேர்ந்து கேட்டிருக்கிறார். செஷல்ஸ் தீவிற்கு கடல் குளியல் போட்டு கடற்கரையில் ஓய்வெடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இடையில் புகார் பிரச்சினை வந்தபோது சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் வழியாக செஷல்ஸ் தீவு செல்ல ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் பார்த்தால் இதுநாடா இல்லை ஹாலிவுட் பணத்திருட்டு படமா என்ற கேள்வி எழுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.