உக்ரைன் எல்லையில் படைகளை வாபஸ் பெற்றதாக ரஷ்யா சொல்வதை நம்ப முடியாது: அமெரிக்கா, நேட்டோ கருத்து; எந்நேரமும் தாக்குதல் நடக்கும்

புதுடெல்லி: உக்ரைன் எல்லையில் படைகளை வாபஸ் பெற்று வருவதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தெரிவித்துள்ளன. எந்த நேரத்திலும் திடீர் தாக்குதலில் அது ஈடுபடக் கூடும் என கூறியுள்ள அவை, அப்படி நடந்தால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளன. இதனால், உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது.அமெரிக்கா, நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, அந்நாட்டை தாக்குவதற்காக 3 எல்லைகளிலும் சுற்றிவளைத்து 1.50 லட்சம் வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து வருகின்றன. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் பைடன் நடத்திய தொலைபேசி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, உக்ரைனை ரஷ்யா நேற்று தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்லையில் குவித்திருந்த படையில் ஒருபகுதியை திடீரென திரும்பப் பெற்றது. இதை அனைவரையும் குழப்பி இருக்கிறது. தாக்குதல் முடிவை புடின் மாற்றிக் கொண்டாரா என கருதப்பட்டது. இந்நிலையில், நேற்றும் பல இடங்களில் இருந்து படைகளை வாபஸ் பெற்று வருவதாக ரஷ்யா அறிவித்தது. ‘உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டமில்லை. போர் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டு வருகிறோம்,’ என அது கூறியுள்ளது. ஆனால், அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இதை நம்ப மறுத்துள்ளன. ‘பெலாரஸ் எல்லை, கருங்கடல் பகுதிகளில் ரஷ்ய ராணுவமும், கடற்படையும் போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன. குறிப்பிட்ட அளவு படையை மட்டும் திரும்ப பெற்றுள்ள ரஷ்யா, உக்ரைன் மீது எந்நேரமும் ரஷ்யா போர் தொடுக்கலாம்,’ என்று அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது.இது குறித்து புடின் கூறுகையில், `ராணுவ வீரர்களின்  பயிற்சி முடிந்ததால் முகாம்களுக்கு திருப்பி அனுப்பினோம். உக்ரைன்  விவகாரம் பற்றி அமெரிக்கா, நேட்டோ நாடுகளுடன் நம்பிக்கையூட்டும்  பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ரஷ்யா போரை விரும்பவில்லை’  என்று தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கவே படைகளை திரும்ப பெறுவதாகவும், மேற்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா கூறி வருவதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன. இது தொடர்பாக பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைனில் போர் வெடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. உக்ரைன்  மீதான ரஷ்ய தாக்குதலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்க தயாராக உள்ளோம்.  உக்ரைனில் உள்ள  அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால் கடுமையான பதிலடி கொடுப்போம். ரஷ்ய படைகள் உண்மையில் வெளியேறுவது நல்லது. ஆனால், ரஷ்ய படைகள் தங்கள் தளங்களுக்குத் திரும்பும் தகவலை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ரஷ்யா தனது படைகளை திரும்ப பெறுவதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்,’ என்று  கூறியுள்ளார். ரஷ்யாவின் படை வாபசை ஒரு தந்திரமாகவே அமெரிக்கா பார்க்கிறது. இதனால், உக்ரைனில் போர் பதற்றம் நீடிக்கிறது.இந்தியர்களை மீட்க அதிக விமானங்கள்ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுவதால், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் திரும்புவதற்கு வசதியாக கூடுதல் விமானங்களை இயக்குவது பற்றி விமானப் போக்குவரத்து அதிகாரிகள், பல்வேறு விமான நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்..உக்ரைன் ராணுவ இணையதளம் ஹேக் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், ஆயுதப்படை  மற்றும் 2 அரசு வங்கிகளின் இணைய தளங்கள் நேற்று ஹேக்கர்களால் முடக்கப்பட்டன. இது, ரஷ்யாதான் இந்த சைபர் கிரைம் தாக்குதலை நடத்தி இருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.