உ.பி.யில் இரும்பு கிரில் அறுந்ததால் கிணற்றில் விழுந்து 13 பெண்கள் உயிரிழப்பு: திருமண விழாவில் சோகம்

லக்னோ: உ.பி.யில் இரும்பு கிரில் அறுந்ததால் கிணற்றில் அமர்ந்திருந்த 13 பெண்கள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தனர். திருமண விழாவில் நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கியா கிராமத்தில் நேற்று ஒரு திருமணம் நடந்தது. மணமகன், மணமகள் வீட்டார் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் விழாவுக்கு வந்திருந்தனர். விழாவின் போது, ​சடங்கு நிகழ்ச்சிக்காக ​கூடியிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று இரும்பு கிரிலில் அமர்ந்திருந்தனர். அதிக பாரம் காரணமாக திடீரென கிரில் உடைந்து விழுந்தது. இதில், பெண்கள், சிறுமிகள் உள்பட 13 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர்.  தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் தத்தளித்த பெண்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 13 பெண்கள் பரிதாபமாக இறந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களது சடலங்களை போலீசார் மீட்டனர்.  படுகாயமடைந்த 2 பேர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தை குஷி மாவட்ட நீதிபதி பார்வையிட்டார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’ என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், குஷிநகரில் நடந்த விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளும் வழங்கி வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.