கிணற்றின் மேல்தளம் உடைந்ததால் உள்ளே விழுந்து 13 பெண்கள் பலி – திருமண நிகழ்ச்சியில் அரங்கேறிய சோகம்

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியின் போது விருந்தினர்களில் பெண்கள் வீட்டிற்கு பின்னால் அமைந்திருந்த கிணற்றின் மேல் ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர். 

கிணற்றின் மேல் பகுதி இரும்பு வலையான ஆன கான்கிரீட் மேடை அமைக்கபப்ட்டிருந்தது. அதன் மீது ஏறி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இரும்பால் ஆன கான்கிரீட் மேல் தளம் வலிமையாக இருப்பதாக கருதி 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த கிணற்றின் மீது ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர். 
அப்போது, பாரம் தாங்காமல் கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த இரும்பாலான கான்கிரீட் மேல் தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், மேல் தளத்தில் நின்றுகொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஆழமான கிணற்றுக்குள் விழுந்தனர்.
இந்த கோர விபத்தை கண்ட அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புபடையினர் கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 15-க்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.  ஆனால், கிணற்றுக்குள் விழுந்ததில் படுகாயமடைந்து 13 பெண்கள் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த பெண்களை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் 13 பெண்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.