‘சார்’ என்று அழைத்த வழக்கறிஞர்; சூடாக பதிலடி கொடுத்த பெண் நீதிபதி – வைரலாகும் பதிவு

பெண் நீதிபதியைப் பார்த்து ‘சார்’ என்று வழக்கறிஞர் திரும்ப திரும்ப அழைத்ததும், அதன்பின்பு இருவருக்கும் நிகழ்ந்த சூடான விவாதத்தால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.
ஆணுக்கு பெண் சமம் என்று என்னதான் சட்டம் இயற்றினாலும், சமுதாயத்தில் பாலின பாகுபாடுகள் அதிகரித்துத்தான் காணப்படுகின்றன. அது, குடும்பத்தில் பாசம், சொத்து ஆகட்டும், பணியிடத்தில் பதவி, சம்பாத்தியம் ஆகட்டும், அரசு, அரசியல் பதவிகளில் இட ஒதுக்கீடு ஆகட்டும், பல சவால்களையும், சிக்கல்களையும் கடந்த பின்பே ஓரளவுக்கு உயர்வான இடத்தை அடைய முடிகிறது.
அந்தவகையில், 2022-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இருக்கும் இந்த சமயத்திலும், அப்படி ஒரு சம்பவம் மெட்ரோ நகரமான டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேற்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கை நீதிபதி ரேகா பள்ளி என்ற பெண் நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது வாதாடிய எதிர்க்கட்சி ஆண் வழக்கறிஞர், பெண் நீதிபதியைப் பார்த்து “சார்.. சார்” என்றே வாதாடிக் கொண்டிருந்தார்.
image
இதைப் பார்த்த நீதிபதி ரேகா பள்ளி குறுக்கிட்டு, ஒரு கட்டத்தில் ரேகா, “நான் சார் இல்லை. அதை உங்களால் அறிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்” என்றார். அதற்கு அந்த வழக்கறிஞர், “மன்னிக்கவும். நீங்கள் அமர்ந்திருக்கும் (நீதிபதி) இருக்கை காரணமாகவே உங்களை ‘சார்’ என்று அழைக்கிறேன்” என்று தெரிவித்தார். தலைமை நீதிபதி போன்ற உயரிய பதவிகள் ஆண்களுக்கானவை எனப் பொருள்படும் விதமாக ஆண் வழக்கறிஞர் பேசிக் கொண்டிருந்தார்.
இதனால் கடுப்பான நீதிபதி ரேகா பள்ளி, அவருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக , “இத்தனை காலத்துக்குப் பிறகும்கூட நீதிபதி பதவி ‘சார்’களுக்கானது என்று நீங்கள் நினைத்தால் அது இன்னும் மோசமானது. இந்த மனநிலை தொடர்வது வருந்தத்தக்கது. இன்றைய இளம் தலைமுறையினரே இப்படிப் பாகுபாடு காட்டுவதை நிறுத்தவில்லை என்றால், எதிர்காலத்தின் மீது என்ன நம்பிக்கை வைக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
image
இந்த உரையாடல் லிவ் லா என்ற ட்விட்டர் பதிவில், பதிவிட்டதையடுத்து பேசும் பொருளாகியுள்ளது.
நீதிபதியின் இந்த கருத்து வைரலாகி வருகிறது. நீதித்துறையில் நீண்ட காலமாகவே பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பெண் வழக்கறிஞர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு, பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஒன்று, இந்திய நீதிமன்றங்களில், பெண் நீதிபதிகளை அதிக அளவில் நியமிக்க வேண்டும் என்று கோரி பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அந்த மனுவில், கவுஹாத்தி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம் உயர்நீதிமன்றங்களில் தலா ஒரே ஒரு பெண் நீதிபதிதான் இருக்கிறார். மணிப்பூர், மேகலாயா, பாட்னா, திரிபுரா, உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.