"ஹலோ.. நான் அய்யா இல்லை".. வக்கீலை வறுத்தெடுத்த நீதிபதி!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதியைப் பார்த்து “சார் சார்” என்று கூப்பிட்ட வக்கீலுக்கு அந்த பெண் நீதிபதி சரியான பதிலடி கொடுத்து அவரைத் திருத்தினார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கை
நீதிபதி ரேகா பள்ளி
என்ற பெண் நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது வாதாடிய எதிர்க்கட்சி வக்கீல், நீதிபதியைப் பார்த்து “சார்.. சார்” என்று விளித்துப் பேசினார்.

இதைப் பார்த்த நீதிபதி ரேகா பள்ளி குறுக்கிட்டு, நான் சார் இல்லை.. சரியா பேசுங்க என்று வக்கீலிடம் கூறினார். அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த வக்கீல், சாரி மேடம்.. நீதிபதி இருக்கையில் நீங்கள் அமர்ந்திருப்பதால் நான் சார் என்று கூறி விட்டேன் என்று கூறினார்.

அவ்வளவுதான் கடுப்பாகி விட்டார் நீதிபதி, இது இன்னும் மோசம்.. ஏன் நீதிபதி இருக்கையில் ஆண்கள் மட்டும்தான் அமர வேண்டுமா.. இளம் வயது வக்கீல்களே இப்படி இருந்தால் எப்படி எதிர்காலம் உருப்படும் என்று கேட்டார்.

நீதிபதியின் இந்த கருத்து வைரலாகியுள்ளது. நீதித்துறையில் நீண்ட காலமாகவே பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பெண் வக்கீல்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, பெண் வக்கீல்கள் சங்கம் ஒன்று, இந்திய நீதிமன்றங்களில் அதிக அளவில் பெண் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று கோரி பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அந்த மனுவில், குவஹாத்தி, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், ஒரிசா, ராஜஸ்தான், சிக்கிம் உயர்நீதிமன்றங்களில் தலா ஒரே ஒரு பெண் நீதிபதிதான் இருக்கிறார். மணிப்பூர், மேகலாயா, பாட்னா, திரிபுரா, உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்திலேயே, பெண் நீதிபதியைப் பார்த்து சார் சார் என்று அழைத்த வக்கீலின் செயல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.