20 ஓவர் கிரிக்கெட்: பந்து வீச்சாளர் தரவரிசையில் ஹேசில்வுட் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

துபாய்,
20 ஓவர் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவாிசையில் டாப்-4 இடங்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (805 புள்ளி), முகமது ரிஸ்வான் (798 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் (796 புள்ளி), இந்தியாவின் லோகேஷ் ராகுல் (729 புள்ளி) ஆகியோர் மாற்றமின்றி தொடருகிறார்கள். இந்தியாவின் விராட் கோலி 10-வது இடமும், ரோகித் சர்மா 11-வது இடமும் வகிக்கிறார்கள்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 2 இடம் சரிந்து 3-வது இடத்துக்கு (760 புள்ளி) தள்ளப்பட்டார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சி (784 புள்ளி) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். 
இலங்கைக்கு எதிரான முதல் மூன்று 20 ஓவர் போட்டிகளில் 8 விக்கெட் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 4 இடம் அதிகரித்து 2-வது இடத்தை (783 புள்ளி) பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். அவர் முதலிடத்தில் உள்ள ஷம்சியை விட ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 21-வது இடத்தில் உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.