ஈரான் தீவிரமாக இருந்தால் அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியம்: அமெரிக்கா

வாஷிங்டன்: அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் தீவிரமாக இருந்தால், சில நாட்களில் ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் கலந்துகொண்டுள்ளன. அமெரிக்காவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளது.

அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை சிலவற்றை நீக்குவதாகவும் ஜோ பைடன் முன்னரே தெரிவித்தார்.

இந்த நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், பரஸ்பர புரிதலோடு ஈரான் இந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தால் சில நாட்களில் ஒப்பந்தம் சாத்தியமாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இறுதி முடிவை ஈரான் விரைவில் எடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

பின்னணி: அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது.

மேலும், தெஹ்ரானுக்குத் தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான்அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த ஆண்டு பதவி ஏற்றது முதல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.