சென்னை பெசன்ட்நகரில் கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த கும்பல்… பரபரப்பு…

சென்னை:  பெசன்ட் நகரில் திமுகவினர் கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம்  பெசன்ட் நகரின் ஓடைக்குப்பம் பகுதியில் 179ஆவது வார்டில் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க தாமதமான நிலையில், சில இடங்களில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வாரி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை பெசன்ட்நகர் 179ஆவது வார்டில்  அதிமுக சார்பாக ஜமுனா கணேசனும், திமுக சார்பில் கயல்விழியும் போட்டியிடுகின்றனர். இங்கு இன்று காலை வாக்குப்பதிவு குறிப்பட்ட நேரத்தில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பிற்பகல்  திடீரென திமுகவினர் சிலர் கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்கு இயந்திரத்தை அடித்து உடைத்து தகராறில் ஈடுபட்டனர். திமுகவைச் சேர்ந்த திருவான்மியூர் கதிர் அடியாட்களுடன் வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் உடைந்த வாக்கு இயந்திரத்தை மாற்றி, புதிதாக இயந்திரம் கொண்டு வரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து திருவான்மியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல, வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட 18ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நசீமுன்னாவுக்கு ஆதரவாகத் தொண்டர் ஒருவர் பணப்பட்டுவாடா வில் ஈடுபட்டதாகத் தகவல் பரவியது. இதனையடுத்து திமுகவினருக்கும், ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்தோருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் சட்டையைக் கிழித்து சண்டையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.