நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; பஞ்சாப்பில் ஆட்சியை பிடிப்பது யார்?.. உத்தரபிரதேசத்தில் 59 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தல்

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் 59 தொகுகளுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. அதே நேரத்தில் பஞ்சாப்பில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டி கடுமையாக நிலவுகிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து இந்திய தலைமை  தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் முதல்கட்ட தேர்தல் கடந்த 10ம் தேதி 58 தொகுதிகளில் நடந்தது. 2வது கட்ட தேர்தல் கடந்த 14ம் தேதி நடந்தது. இரு கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடைசிகட்ட தேர்தல் மார்ச் 7ம் தேதி நடக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் 28ம் தேதி முதல்கட்ட தேர்தலும் மார்ச் 5ம் தேதி 2ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் கடந்த 14ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. உத்தரபிரதேசத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளுக்கு நாளை நடக்கிறது. கசன்கஞ்ச், இடா, ஹத்ராஸ், பிரோசாபாத், மணிப்பூரி, பரூக்பாத், கணுஞ்,  எட்டுவா, ஹவ்ரிவா, கான்பூர் தெகத், ஹம்பூரிபூர், ஜலுன், மகோபா, ஜான்சி,  லலித்பூர், கான்பூர்நகர் ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு  நடக்கிறது. மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 15,553 வாக்குச்சாவடிகள் மையங்களும், 25,741 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 2.15 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு நேற்று மாலை 5 மணியுடன் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பஞ்சாப் மாநிலத்தை பொருத்தவரையில் நாளை (20ம் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் 117 தொகுதிகளை கொண்டது. இந்த தேர்தலில் 9 பெண்கள் உள்பட 1304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 24,740 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலை மை தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் பிப்ரவரி 16ம் தேதி குரு ரவீந்திரதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பங்கேற்க பஞ்சாபில் இருந்து வாரணாசிக்கு ஏராளமானோர் செல்வார்கள் என்பதால் தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனவே, தேர்தல் தேதி 20ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பாஜ, சிரோமணி அகாலி தளம் என பலமுனை போட்டி உள்ளது. கடந்த சில தினங்களாக தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இங்கு பலமுனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் அனல் பறந்தது. காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு நிதியுதவி, ஒரு லட்சம் அரசு வேலைகள், மது விற்பனை மற்றும் மணல் விற்பனைக்கான வாரியங்கள் உருவாக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் மற்றும் சிரோமணி அகாலிதளம் தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா ஆகியோர் முறையே படாவூர், ஜலாலாபாத், ராய்கோட் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் ரோட்ஷோ நடத்தினர். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாட்டியாலாவில் ரோடு ஷோ நடத்தினர். அமரீந்தர் சிங்கின் மனைவியும், காங்கிரஸ் எம்பியுமான பிரனீத் கவுரும் ரோட் ஷோவில் பங்கேற்றார். முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோரும் கடைசி நாளான நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் ஆளும் காங்கிரஸ், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக போராடி வருகிறது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி, பாஜவும் மல்லு கட்டுகிறது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தலை  முன்னிட்டு பஞ்சாபில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.