பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா

மாஸ்கோ:
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது.
எனினும், உக்ரைன் மீது படையெடுக்க ரஷியா வேண்டும் என்றே சில சம்பவங்களை தூண்டி விடலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த பதற்றத்துக்கு மத்தியில்  ரஷியா இன்று நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து அதிரவைத்துள்ளது. ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை செலுத்தியது. தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
அனைத்து ஏவுகணைகளும் அவற்றின் இலக்குகளைத் தாக்கி, அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறனை உறுதிப்படுத்தியதாக ரஷியா கூறி உள்ளது. 
எதிரிக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் படைகளின் செயல்திறனை முழுமையாக வெளிப்படுத்துவதே இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம் என ராணுவ தளபதி வாலரி தொலைக்காட்சி வாயிலாக அதிபர் புதினிடம் தெரிவித்தார். ரஷிய அதிபர்  மாளிகையில் இருந்து அதிபர் புதின், இந்த பயிற்சிகளை பார்வையிட்டார். இந்த ஏவுகணை சோதனையால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.