காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு அணி அமையாது: சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்

மும்பை: காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு அணி அமையாது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை), தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். இந்தச் சந்திப்பு 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத முன்னணியை உருவாக்கும் முயற்சி என்று கூறப்பட்டது. இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வும் கவனமாகக் காய் நகர்த்துவதாக விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில், மும்பையில் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், “காங்கிரஸ் இல்லாத அணி நிச்சயமாக உருவாக்கப்படாது. நேற்றைய சந்திப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாங்கள் ஒருபோதும் காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு அணி பற்றி பேசியதில்லை. மம்தா பானர்ஜி, காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்குவது பற்றி பேசியபோது கூட சிவசேனாதான் முதலில் காங்கிரஸ் ஆதரவுக் குரலை எழுப்பியது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நிச்சயமாக அனைவரையும் அரவணைத்து அழைத்து அணியை முன்னெடுத்துச் செல்வார் என நம்புகிறோம்” என்று கூறினார்.

ஐமு கூட்டணி இல்லையே… – கடந்த டிசம்பர் மாதம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 3 நாட்கள் பயணமாகப் சென்றிருந்தார். அப்போது சிவசேனா கட்சித் தலைவரும், உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரேவையும், மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் அளித்தப் பேட்டியில், “நானும், மற்ற கட்சியினருடன் சேர்ந்து பாஜகவுக்கு எதிராகப் போரிடத் தயாராக இருக்கிறேன். ஆனால், சிலர் விருப்பமில்லாமல் இருக்கும்போது, என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

நாட்டில் அதிகரித்துவரும் பாசிஸத்துக்கு எதிராக வலிமையான மாற்று தேவை என்று நான் நம்புகிறேன். நான் மட்டும் தனியாக முடியாது. யாரெல்லாம் வலிமையாக இருக்கிறார்களோ, எங்கிருந்தாலும் இதைச் செய்யலாம். சரத்பவார் மூத்த தலைவர், அவருடன் நான் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது இல்லை. வலிமையான மாற்று கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறோம். நாம் பாஜகவுக்கு எதிராக கண்டிப்பாகப் போராட வேண்டும். சிலர் போராடாதபோது நாம் என்ன செய்யமுடியும். நாம் போராட வேண்டும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து காங்கிரஸ் தலைமை எதிர்ப்புக் கருத்துகளையே அவர் கூறி வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு அணி அமையாது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். பாஜக எதிர்ப்பு அணி ஆரம்ப நிலையிலேயே ஆட்டம் காண்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.