கிட்னி சரியில்லை லாலு பிரசாத் உடல்நிலை மோசமாகிறது

ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தொடர்ந்து சிறை தண்டனை பெற்று வருகிறார். ஏற்கனவே, 4 வழக்குகளில் அவருக்கு 14 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 5வது வழக்கிலும் நேற்று முன்தினம் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழுவின் தலைவர் வித்யாபதி கூறுகையில், ‘‘லாலுவின் ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் நிலையாக இல்லை. தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. காலையில் சர்க்கரை அளவு 70 ஆகவும், பிற்பகலில்  240 ஆகவும் உயர்கிறது. சிறுநீரகம் 20 சதவீத செயல்திறனுடன்  மட்டுமே உள்ளது. இதனால், அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.