உத்தர பிரதேசத்தில் 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 57.45% வாக்குகள் பதிவாகின

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 4- ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. உத்தர பிரதேசத்தில் இதுவரை மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பண்டா, ஃபதேபூர், ஹர்டோய், லக்கிம்பூர் கேரி, லக்னோ, ரேபரேலி, சீதாபூர், பிலிபித் மற்றும் உன்னாவ் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உட்பட்ட 59 ெதாகுதிகளில் நான்காவது கட்டமாக இன்று (பிப். 23) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் மொத்தம் 624 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யாததால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் சமாஜ்வாதி கட்சி புகார் அளித்துள்ளது. 59 தொகுதிகளில் 29 தொகுதிகள் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட் – பதற்றம்) பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் மூன்று அல்லது அதற்கு  மேற்பட்ட வேட்பாளர்கள் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. மொத்த வேட்பாளர்களில் 129 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. அதனால், இப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச சட்ட அமைச்சர் பிரிஜேஷ் பத்தக், சமாஜ்வாதி வேட்பாளர் சுரேந்திர சிங் காந்தியை லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் எதிர்கொண்டுள்ளார். மற்றொரு அமைச்சர் அசுதோஷ் தாண்டன் லக்னோ கிழக்குத் தொகுதியில் சமாஜ்வாதி தேசிய செய்தித்தொடர்பாளர் அனுராக் பதாரியாவை எதிர்கொண்டுள்ளார். ரேபரேலி தொகுதி காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் நிலையில், அங்கு பாஜக சார்பில் அதிதி சிங் (ஏற்கனவே காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்) போட்டியிடுகிறார். ஒன்றிய பாஜக அமைச்சர் மகனின் கார் ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவமும், அதையொட்டி ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்த லக்கிம்பூர் கேரி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த உன்னாவ் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று 4ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில் கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக 51 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 4 தொகுதிகளை சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் 3 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தன. பாஜக கூட்டணியில் இருந்த அப்னா தளம் ஒரு தொகுதியை வென்றிருந்தது. உத்தரபிரதேசத்தில் இன்னும் 3 கட்ட தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. கடைசி கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3ம் தேதி முடிவடையும் நிலையில் மார்ச் 10ம் தேதி உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாக உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.