நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றியது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என்றுமுதல்வர் ஸ்டாலின் பெருமிதத் துடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவானவாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அத்துடன், பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுக தன்வசப்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

மூத்த நிர்வாகிகள் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலினை திமுகபொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், அ.ராசா, முன்னாள் எம்எல்ஏ வாகை சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து தேர்தல்வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். நேற்று மாலை அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை வழங்கிய தமிழகமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘எங்கள் கூட்டணிக்கு முழு வெற்றியை தாருங்கள்.அப்படித் தந்தால் அதைப் பயன்படுத்தி உங்களுக்கு பணியாற்ற காத்திருக்கிறோம்’ என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்தேன். அதை ஏற்று முழு வெற்றியை மக்கள் தந்துள்ளனர். கடந்த 9 மாத ஆட்சிக்கு மக்கள் வழங்கியுள்ள நற்சான்றுதான் இந்த வெற்றி.

திராவிட மாடலுக்கு அங்கீகாரம்

என்னை பொறுத்தவரை இது,திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள்தந்துள்ள அங்கீகாரம். திமுக ஆட்சிஅமைந்தால் கொடுத்த வாக்குறுதியை நிச்சயமாக காப்பாற்றுவார்கள் என்று மக்கள் நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கையை 9 மாதங்களில் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். இன்னும் நிறைவேற்றுவோம் என உறுதி அளிக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களை, வரலாற்றில் பதிவாகும் சாதனைகளை செய்துள்ளோம்; செய்யப் போகிறோம். இந்த வெற்றி கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் உறுதி வந்துள்ளது. எங்கள் பொறுப்புகளை உணர்ந்து அரசு சார்பில் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

கூட்டணி கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பும் பிரச்சாரமும் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. அவர்களுக்கு நன்றி. உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு தரப்பட்டுள்ளன. தேர்தலில் சரிபாதி பங்கு பெண்கள் வந்துள்ளனர். இது மாபெரும் சமூக புரட்சி, திராவிட மாடல் புரட்சி.பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதே திமுகவின் குறிக்கோள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்

வெற்றியை ஆடம்பரமாக இல்லாமல் அமைதியாகக் கொண்டாட வேண்டும். மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு உண்மையாக உழைக்க வேண்டும். அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவேண்டும். உங்கள் மீது எந்த புகாரும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை நான் தொடர்ந்து உறுதியாக கண்காணிப்பேன். தவறு செய்தால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப் பேன்; தயங்கமாட்டேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது: திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளீர்கள். இது குறித்து…?

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று வாழ்த்துபெற்று, உறுதி எடுத்துக் கொண்டோம். அப்போது, ‘எங்களுக்கு வாக்களித்த மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். வாக்களிக்க தவறியவர்கள் வருத்தப்படும் அளவுக்கு எங்கள் பணி இருக்கும்’ என்று தெரிவித்திருந்தேன். அதன்படி, கடந்த 9 மாதமாக பணி செய்து வருகிறேன். அதனால்தான் அதிமுககோட்டையான கொங்கு மண்டலத்தையே கைப்பற்றியுள்ளோம்.

மற்ற தலைவர்கள் நேரடியாக பிரச்சாரம் செய்தபோது நீங்கள்நேரடியாக பிரச்சாரம் செய்யாதது குறித்து விமர்சனம் வைக்கப் பட்டதே?

மக்களை என்னைவிட அதிகமாக யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். நான் எப்போதும் மக்களுடன்தான் இருப்பேன். மக்களை இப்போதும்கூட சந்தித்து வருகிறேன்.கரோனாவுக்காக பல கட்டுப்பாடுகள் விதித்துள்ள சூழலில், நான் நேரடியாக செல்லும் நேரத்தில் அதற்கு இடையூறாக இருந்து விடக்கூடாது. பாதுகாப்புக்காக அதிக செலவு ஏற்படும். தேவையில்லாத பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்றுதான் காணொலி வாயிலாக பேசியுள்ளேன். வெற்றி பெற்ற பின் நேரடியாக மக்களை சந்திக்க காத்திருக்கிறேன்.

அதிமுகவைவிட பாஜக அதிக வாக்குகள் வாங்கியுள்ளதே?

சில இடங்களில் வேட்பாளர்கள் அல்லது கட்சியை வைத்து வாக்களிப்பார்கள். முழு ரிசல்ட் வந்ததும்என் விளக்கத்தை தருகிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார். கருணாநிதி நினைவிடக் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். அவருடன், அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,எம்.பி.க்கள் தயாநிதிமாறன், அ.ராசா உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.