"ஹிஜாப் விவகாரம்.. ஷிமோகா கொலை".. இந்து ஓட்டுக்களைக் குறி வைக்கும் பாஜக!

கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை “இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும்” முயற்சியாக அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள்.
பாஜக
இந்த இரு பிரச்சினைகளையும் முன்வைத்தே எதிர் வரும் 2023 சட்டசபைத் தேர்தலை சந்திக்கத் தயாராகும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

சமீபத்தில் கர்நாடகத்தை இரண்டு சம்பவங்கள் உலுக்கிப் போட்டன. ஒன்று, உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் தொடங்கிய ஹிஜாப் தடை விவகாரம். இந்த தடைக்கு எதிராக முதலில்அந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் போராடினர். ஆனால் ஹிஜாப் தடை மெல்ல மெல்ல பிற கல்லூரிகளுக்கும் பரவியது. மாணவிகள் போராட்டமும் விஸ்வரூபம் எடுத்தது.

இந்த நிலையில்தான் காவித் துண்டுடன் இந்துத்துவா மாணவர்கள் போராட்டத்தில் குதித்து இதற்கு வேறு மாதிரியான கலர் கொடுக்க ஆரம்பித்தனர். இந்துக்கள் Vs முஸ்லீம்கள் என்ற போராட்டக்களமாக இது மாறியது. எதிர்பார்த்தது போலவே இந்த விவகாரம் மத பிரச்சினையை கிளறி விட ஆரம்பித்தது. இந்த நிலையில் கர்நாடக ஹைகோர்ட் தலையிட்டதைத் தொடர்ந்து விவகாரம் மெல்ல அடங்கியது.

2வது சம்பவம் ஷிமோகாவில் நடந்த பஜ்ரங் தளம் தொண்டர் ஹர்ஷா படுகொலை. ஒரு கும்பலால் ஹர்ஷா படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் இந்து அமைப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை மிகப் பெரிய கெளரவப் பிரச்சினையாக அவர்கள் கருதினர். மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஷிமோகாவில் இந்துத்வா சக்திகளுக்கு பலம் அதிகம். அப்படி இருக்கும்போது பஜ்ரங் தளம் தொண்டர் கொலை நடந்தது அவர்களை கொதிக்க வைத்து விட்டது. பாஜக அரசு தனது கடமையிலிருந்து தவறி விட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. இஸ்லாமியர்களுக்கு எதிராக மூத்த தலைவர்கள் பலரும் குரல் கொடுக்க விவகாரம் வேறு மாதிரியாக திரும்பியது.

இந்த இரு விவகாரங்களும் இப்போதைக்கு அடங்கி விட்டாலும் கூட இதை வைத்துத்தான் பாஜகவும், இந்து அமைப்புகளும் 2023 சட்டசபைத் தேர்தலை சந்திக்கப் போவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இந்த இரு சம்பவங்களும் சமூக வலைதளங்களிலிருந்து இன்னும் சில நாட்களில் காணாமல் போய் விடும். ஆனால் இந்த இரு சம்பவங்களும் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க உதவப் போகும் கருவிகள் ஆகும். இந்த இரு சம்பவங்களையும் வைத்துத்தான் இந்து வாக்குகளை வலுவாக்கும் பணியை பாஜக உள்ளிட்ட இந்துத்வா சக்திகள் செய்யப் போகின்றன.

இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்கவும், தவிர்க்கவும் இந்துக்கள் ஒருங்கிணைய வேண்டும் என்பதையே மைய மந்திரமாக வைத்து அவர்கள் செயல்படப் போகிறார்கள். கல்லூரி மாணவர்களை தம் பக்கம் இழுக்கும் நோக்கில்தான் இந்துத்வா மாணவர்களுக்கு காவித் துண்டை கையில் கொடுத்து போட வைத்து அந்த வாக்கு வங்கியை தன் பக்கம் ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது இந்துத்வா அமைப்புகள். இது ஒரு திட்டமிட்ட வேலை என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தேர்தல் குறித்தோ, அரசியல் குறித்தோ எந்தக் கருத்தையும் கொண்டிராத மாணவர்களையும் கூட இந்த
ஹிஜாப் விவகாரம்
பிரித்துள்ளது. இந்து மாணவர்கள் என்றால் அவர்கள் பாஜக பக்கம் அணி திரள வேண்டும் என்ற மறைமுகமான அழுத்தத்தை பாஜக உருவாக்கியுள்ளது. மாணவர்களின் வாக்கு வங்கி வரும் தேர்தலில் மிகப் பெரிய பங்காற்றும் என்ற சூழலும் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் எஸ்டிபிஐ மூலம் முஸ்லீம் சமுதாயத்தினரை பிரிக்கும் வேலைகளும் நடக்க ஆரம்பித்துள்ளனவாம். இது கண்டிப்பாக பாஜகவுக்கே பலன் த ரும் என்று சொல்கிறார்கள். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படப் போவது நிச்சயம் காங்கிரஸ் கட்சிதான். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸால் வலுவாக செயல்பட முடியாத நிலை உள்ளது. இருக்கும் வாக்கு வங்கியைக் காப்பாற்றும் நோக்கில்தான் காங்கிரஸ் செயல்பட வேண்டியுள்ளது.

ஆனால் பாஜகவோ, எதியூரப்பாவின் இழப்பை சரிக்கட்டும் வகையில் புதிய வாக்கு வங்கிகளை உருவாக்குவதுடன், இந்து வாக்கு வங்கியையும் பலப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதற்கு ஹிஜாப் மற்றும்
ஷிமோகா கொலை
அக்கட்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.