பிஹாரில் கூட்டணி, உ.பி-யில் பாஜக எதிர்ப்பு: முகேஷ் சஹானியின் இருவேறு அரசியல்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டும் என விகாஸீல் இன்ஸான் கட்சி தலைவர் முகேஷ் சஹானி கூறியுள்ளார். பிஹாரில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் இவர், உபி சட்டப்பேரவை தேர்தலில் எதிர்த்து இருவேறுவகை அரசியல் செய்து வருகிறார்.

பிஹாரின் மீனவர் சமுதாய ஆதரவுக் கட்சியாக இருப்பது விகாஸீல் இன்ஸான் கட்சி(விஐபி). இதன் தலைவரான முகேஷ் சஹானி, பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இடம் பெற்றிருந்ததோடு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தது. மேலும், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சியில் முகேஷ் அமைச்சராகவும் உள்ளார்.

இந்நிலையில், பிஹார் மாநில எல்லையில் உள்ள உபியின் கிழக்குப் பகுதிகளின் 56 தொகுதிகளில் விஐபி போட்டியிடுகிறது. இதன் பிரச்சாரத்திற்காக முகேஷ் இன்று பலியா வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் கூறும்போது, “எங்கள் கட்சியின் முதல் எதிர்ப்பு மத்திய அரசின் மீதானது. இவர்களிடம் எங்கள் மீனவர் சமுதாயத்திற்காக தொடர்ந்து ஒதுக்கீடு கேட்டு வருகிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல வாக்குறுதிகளை அளிக்கிறார். பிறகு தேர்தல் முடிந்தவுடன் அவற்றை மறந்து விடுகிறார். எனவே, உபியின் ஆட்சியிலிருந்து பாஜக அகற்றப்பட வேண்டும். அப்போது தான் அக்கட்சிக்கு மீனவர் சமுதாயத்தின் முக்கியத்துவம் புரியும்.

மீனவர் சமுதாயத்திற்கு தனியாக ஒதுக்கீடு வழங்காவிட்டால் நாம் 2024 மக்களவை தேர்தலிலும் பாஜகவை எதிர்ப்போம். உ.பியில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாகத் தான் நாம் களம் இறங்கினோம். மொத்தம் 102 தொகுதிகளில் போட்டியிட மனுக்களை தாக்கல் செய்திருந்தோம். பல்வேறு காரணங்களால் வேட்பாளர்களின் மனுக்கள் ரத்தாகி 56 இல் மட்டும் போட்டியிடும் எங்களுக்கு சுமார் 25 இல் வெற்றி கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

பூலன் தேவி சிலை அரசியல்

கடந்த வருடம் ஜூலையில் வாரணாசிக்கு திடீர் என வந்திருந்தார் முகேஷ் சஹானி. அப்போது, தன்னுடன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பியான பூலன் தேவியின் சிலைகளையும் கொண்டு வந்தார்.

உ.பி-யின் சரணடைந்த சம்பல் கொள்ளைக்காரியான பூலன் தேவியின் பெயரால் அரசியல் செய்யவும் முகேஷ் திட்டமிட்டிருந்தார். இதை தடுத்த யோகி தலைமையிலான உத்தர பிரதேச பாஜக அரசு, அனுமதியின்றி சிலைகளை நிறுவ முயல்வதாக அவற்றை பறிமுதல் செய்திருந்தது. இந்த பழைய பகை உணர்வின் காரணமாக முகேஷ், உ.பி தேர்தலில் தனது கட்சியை போட்டியிட வைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. உ.பி சட்டப்பேரவைக்கான ஏழுகட்ட வாக்குப்பதிவுகளில் உபியில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன. பிப்ரவரி 27, மார்ச் 3 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான முடிவுகள் மார்ச் 10 இல் வெளியாகின்றன

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.