பெப்சி தொழிலாளர்களுக்கு மார்ச் 1 முதல் ஊதிய உயர்வு

தமிழ்த் திரைப்பட சங்கங்களில் 24 திரைப்படத் தொழிலாளர்கள் சங்கங்ககளை உள்ளடக்கிய பெப்சி கூட்டமைப்பு ஒரு வலிமையான அமைப்பாக உள்ளது. அந்த கூட்டமைப்பில் உள்ள சங்கங்களின் உறுப்பினர்களை வைத்துத்தான் திரைப்படங்களைத் தயாரிக்க முடியும்.

ஒவ்வொரு வேலைக்கேற்ப அவர்களுக்கு தினசரி ஊதியம் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த ஊதிய உயர்வு மாற்றி அமைக்கப்படும். ஆனால், கடந்த சில வருடங்களாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தரப்படவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தது மற்றும் வேறு காரணங்களால் தடைபட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் பெப்சி அமைப்பு நடத்திய பேச்சு வார்த்தையில் சம்பள உயர்வு எத்தனை சதவீதம் என்பது குறித்து முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வரும் மார்ச் 1ம் தேதி புதிய ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட உள்ளார்களாம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்கிறார்கள்.

தொழிலாளர்கள் தரப்பில் ஊதிய உயர்வு குறித்து மகிழ்ச்சி நிலவுவதாகவும், சில தயாரிப்பாளர்கள் இதனால் படத்தின் பட்ஜெட் இன்னும் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். அதை மறுக்கும் தொழிலாளர் தரப்பு, நடிகர்கள் மட்டும் அவர்களது சம்பளத்தை சில பல கோடிகள் உயர்த்தினால் கூட யோசிக்காமல் தரும் தயாரிப்பாளர்கள் தொழிலாளர்களுக்கு என்று வந்தால் மட்டும் யோசிப்பதாக வருத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.