திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் விலை உயர்வு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் விரைவில் மீண்டும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்  தேவஸ்தான அறங்காவலர் குழு அண்மையில் அவசர ஆலோசனை நடத்தியது. அதில் தரிசன டிக்கெட்டின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகளின் விலை விவரத்தை தேவஸ்தானம் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.120க்கு வழங்கப்பட்டு வந்த சுப்ரபாத சேவை டிக்கெட் ரூ.2 ஆயிரமாகவும், கோயிலுக்குள் 45 நிமிடம் அமர்ந்து சுவாமியை தரிசிக்க கூடிய அர்ச்சனை மற்றும் தோமாலை சேவைக்கான ரூ.200 மதிப்புள்ள டிக்கெட் ரூ.5 ஆயிரமாகவும், ரங்கநாயக மண்டபத்தில் வழங்கப்பட்ட வேத ஆசீர்வாத டிக்கெட் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், ரூ.1000 மதிப்புள்ள கல்யாண உற்சவ டிக்கெட் ரூ.2500 ஆகவும், வெள்ளிக்கிழமையில் நடக்கும் வஸ்திரசேவைக்கான ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் ரூ.1 லட்சத்து 2 ஆயிரமாகவும் நிர்ணயித்துள்ளது.  வியாழக்கிழமையில் நடைபெறும் திருப்பாவாடை சேவைக்கு பிறகு பிரசாதமாக வழங்கப்படும் ரூ.100 மதிப்புள்ள ஜிலேபி ரூ.500 ஆகவும் உயர்த்தியுள்ளது. சிபாரிசு கடிதங்கள் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே இந்த விலை உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.