மோகன்லாலை போலவே தான் அஜித்தும் ; சிலாகிக்கும் வலிமை நடிகர்

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத பல புதிய முகங்களை பார்க்க முடிந்தது. இந்த படத்தின் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய வெளிச்சமும் கிடைத்துள்ளது. ஒருபக்கம் அஜித்துக்கு தம்பியாக படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ் ஐயப்பா என்பவர் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார்.

அதேபோல அஜித்துக்கு எதிராக வில்லன்களுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த மலையாள நடிகர் தினேஷ் பிரபாகர் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறார். இன்னும் சொல்லப்போனால் மலையாள சினிமாவில் கடந்த 10 வருடங்களாக இவர் நடித்து வந்தாலும் ஒரு சாதாரண துணை நடிகர் என்கிற அளவிலேயே மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகாமல் இருந்தார். இந்த வலிமை படம் மலையாளத் திரையுலகிலும் அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்த படத்தில் நடித்தது குறித்தும் அஜித்துடன் பழகிய அனுபவம் குறித்தும் தினேஷ் பிரபாகர் கூறும்போது, “ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அஜித் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அதில் எனக்கு கிடைக்கவில்லை. மீண்டும் வலிமை படத்திற்காக வினோத் என்னை அழைத்ததும், என்ன கதாபாத்திரம் என்றுகூட கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டேன். இங்கே வந்த பிறகு தான் தெரிந்தது எனக்கு போலீஸ் அதிகாரி வேடம் என்றும், அதிலும் படம் முழுக்க அஜித் சாருடன் இணைந்து பயணிக்க போகிறேன் என்றும்.

படப்பிடிப்பின் முதல் நாள் அன்றே என்னிடம் நேரே வந்த அஜித் ஹலோ ஐ அம் அஜித்குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவரது எளிமையை பார்த்து மிரண்டு போய்விட்டேன். மேலும் நேர்கொண்ட பார்வை படத்தில் எனது நடிப்பை பாராட்டினார். அதுமட்டுமல்ல படப்பிடிப்பில் என்னுடனும் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருடனும் மிக இயல்பாகப் பழகி அவர்களுக்கு எந்த ஒரு மனச்சோர்வு வராமல் பார்த்துக் கொண்டார்.

மலையாளத் திரையுலகில் எங்கள் லாலேட்டனுடன் நடிக்கும் போது எப்படி எங்களை பார்த்துக் கொள்வரோ அதே போலத்தான் அஜித் உடன் நடிக்கும் போதும் இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒருவரைக்கூட சோம்பலாக பார்க்க முடியாத அளவிற்கு அவரது பாஸிட்டிவ் எனர்ஜி படக்குழுவினரை ரொம்பவே உற்சாகப்படுத்தியது.

கடந்த இரண்டு நாட்களாக எனது நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து போன் செய்து இவ்வளவு பெரிய படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரத்தில் அஜித் சாருடன் நடித்ததற்காக தொடர்ந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன” என்று சிலாகித்துக் கூறியுள்ளார் தினேஷ் பிரபாகர்.

அதுமட்டுமல்ல மாதவன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ராக்கெட்ரி ; தி நம்பி எபெக்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தினேஷ் பிரபாகர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.