ஆபரேஷன் கங்கா | பிரதமர் மோடி மீண்டும் அவசர ஆலோசனை; மீட்புப் பணியில் 4 அமைச்சர்கள்

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, உக்ரைனில் இருந்து இந்தியமாணவர்களை மீட்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை விவரித்தார். மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

மீண்டும் ஆலோசனை: இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஹர்தீப் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள், ருமேனியா, ஹங்கேரி வாயிலாக மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது போர் தீவிரமடைந்துள்ளதால் இந்திய மாணவர்கள் அவரவர் தங்கியுள்ள இடத்தை விட்டுவெளியே வரக்கூடாது. பொதுவெளியில் நடமாடக் கூடாது. இந்தியர்களுக்காக உக்ரைன் அரசு இலவச ரயில்சேவைகளை இயக்க உறுதி அளித்துள்ளது.

இதுகுறித்த தகவல்களை உக்ரைனின் டெலிகிராம் சேனல்களை பார்த்து தெரிந்துகொள்ளலாம். எந்த இடத்துக்கு சென்றாலும் இந்திய மாணவர்கள் தனியாக செல்லவேண்டாம். குழுக்களாக செல்ல வேண்டும். ரயில் பயணத்தில் குழந்தைகள், பெண்கள், முதியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலாகும் மீட்புப் பணிகள்: இது வரை ஆபரேஷன் கங்கா மூலம் ருமேனியாவிலிருந்து 5 விமானங்கள் இந்தியர்களை மீட்டுத் திரும்பியுள்ள நிலையில் எஞ்சியுள்ளோரில் மீட்பதில் மிகப்பெரிய சவால்கள் உள்ளன. வெளியுறவுச் செயலர் ஹர்ஷ்வர்த்தன் ஷ்ரிங்க்லா, இது சிக்கலான மீட்புப் பணி. நிறைய மாணவர்கள் போர் உக்கிரமடைந்துள்ள பகுதிகளில் உள்ளனர். ஹங்கேரி, ருமேனியா, போலந்து, உக்ரைன் எல்லைகளில் இந்திய தூதர அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நமக்கு நமது குடிமக்களின் நலனே முக்கியம் என்றார்.

லிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் அசீம் இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், ”நாங்கள் இன்னும் பங்கரில் தான் உள்ளோம். ஒரு சிலர் போலந்து எல்லைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்குள்ள உக்ரைன் பாதுகாப்புப் படையினர் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்களை, அதுவும் குறிப்பாக உக்ரைன் பெண்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். ஒருசில இந்திய மாணவிகளை அனுமதிக்கின்றனர். மாணவர்களை அடித்து விரட்டியுள்ளனர்” என்றார்.

இந்நிலையில், இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி, ”இந்தியர்கள் போலந்துக்குள் நுழைய விசா தேவையில்லை என்று கூறியுள்ளார். போலந்தின் வார்சாவில் உள்ள இந்திய பேராசிரியர் சுரேந்தர் கே புட்டானி, உள்ளூர் இந்தியர்கள், குருத்வாராக்கள் மூலம் போலந்திற்குள் வரும் இந்தியர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.