"சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகமே காரணம்" – ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் தேஜஸ்வி பேச்சு

சென்னை: “சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகமே காரணம்” – முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட, அதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ முதல் பாகம் நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை ஏற்க, பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த விழாவில் , சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசும்போது, “தமிழகத்தில் நிலவும் சமூக நீதி, ஒற்றுமையை காணும்போது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.

தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கையால் கவரப்பட்டு, பீஹாரில் அதனை நடைமுறைப்படுத்தியவர் எனது தந்தை லாலு பிரசாத் யாதவ். சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகம்தான் காரணம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள இந்த நூலைப் படிப்பவர்கள், அவரது அரசியலைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.