”உக்ரைனில் இந்திய மாணவர்களை சித்ரவதை செய்கிறார்கள்” – நாடு திரும்பிய மாணவி அதிர்ச்சி தகவல்

உக்ரைன் காவலர்கள் இந்திய மாணவர்களை எல்லையை கடக்க விடுவதில்லை என்றும் கடக்க முயன்றால் தாக்குகிறார்கள் என்றும் நாடு திரும்பிய மாணவி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போர் நடந்து வருவதையடுத்து அங்கு தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனில் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்கிருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து நாடு திரும்ப இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி கடும் குளிரில் குவிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எல்லையை நோக்கி செல்லும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக நாடு திரும்பிய மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார்.

image
உக்ரைனில் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயிலும் மாணவி ஸ்ருதி நாயக் ஏர் இந்தியா விமானம் மூலம் தாயகம் திரும்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”இந்தியா திரும்ப பிப்ரவரி 16ஆம் தேதிக்கு விமான டிக்கெட் எடுத்திருந்தேன். ஆனால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மார்ச் 3 ஆம் தேதிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தேன். அதுவும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் பிப்ரவரி 26 அன்று பேருந்தில் 400 கிமீ பயணம் செய்து ருமேனியாவிற்கு வந்தடைந்தேன். அந்நாட்டு அரசு  இந்திய மாணவர்களுக்கு உதவியது. அங்கிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலமாக டெல்லிக்கு வந்தடைந்தேன். நான் அதிர்ஷ்டசாலி. உயிருடன் வீடு திரும்பியுள்ளேன். இதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உக்ரைனில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிறது. இந்திய மாணவர்களை சித்ரவதை செய்கிறார்கள். எங்களை உக்ரைன் எல்லையை விட்டு கடக்க காவலர்கள் அனுமதிக்கவில்லை. எல்லையை யாராவது கடக்க முயன்றால் கடுமையாக தாக்குகிறார்கள். மாணவிகளை கூட துன்புறுத்துகிறார்கள். இதில் சில மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ”நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்தான் வெளிநாடுகளில் படிக்கிறார்கள்” – மத்திய அமைச்சர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.