இந்த ரோஜா மலரை வைத்து என்ன செய்வது? மத்திய அரசின் வரவேற்பால் கடுப்பான மாணவர்

புதுடெல்லி:
போர் நடைபெறும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், அண்டை நாடுகள் வழியாக விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக ஆபரேசன் கங்கா திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் உக்ரைனில் இருந்து வெளியேறுவதில் இந்திய மாணவர்கள் கடும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். 
உக்ரைனில் இருந்து இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று 798 இந்தியர்களுடன் இந்திய விமானப்படை விமானம் டெல்லி வந்து சேர்ந்தது. புகாரெஸ்ட்டில் இருந்து 183 இந்தியர்களுடன் ஒரு விமானம் மும்பை வந்து சேர்ந்தது. நாடு திரும்பும் மாணவர்களை மத்திய மந்திரிகள் மலர்கள் கொடுத்து வரவேற்கின்றனர்.
இந்நிலையில், டெல்லி வந்து சேர்ந்த பீகார் மாநில மாணவர் ஒருவர், மத்திய அரசின் மீட்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். சண்டை நடக்கும் பகுதியில் இருந்து மக்களை மீட்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல், பூக்களை கொடுத்து வரவேற்பது அர்த்தமற்றது என்றார் அந்த மாணவர்.
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் ஏதாவது உதவி செய்ததா? என்று கேட்டதற்கு பதிலளித்த அந்த மாணவர், ‘எல்லை தாண்டி ஹங்கேரிக்கு வந்தபிறகே உதவி கிடைத்தது. அதற்கு முன் எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்கள் சொந்த முயற்சியில்தான் வந்தோம். நாங்கள் பத்து பேரும் ஒரு குழுவாக இணைந்து ரெயிலில் ஏறினோம். ரெயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது’என்றார்.
‘உள்ளூர் மக்கள் எங்களுக்கு உதவினார்கள். யாரும் எங்களிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. போலந்து எல்லையில் சில மாணவர்கள் துன்புறுத்தலை எதிர்கொண்டது உண்மைதான். அதற்கு நமது அரசாங்கமே பொறுப்பு. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை இருந்திருக்காது. 
இப்போது நாங்கள் இங்கே வந்துவிட்டோம். எங்களுக்கு இந்த மலர் (ரோஜா) வழங்கப்பட்டுள்ளது. இதனால் என்ன பயன்? இதை வைத்து என்ன செய்வோம்? அங்கே எங்களுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் எங்கள் குடும்பத்தினர் என்ன செய்வார்கள்? உரிய நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் பூக்களை கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், இதுபோன்ற காட்சிகளும் தேவைப்படாது. எங்கள் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்தனர்’ என்றும் அந்த மாணவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.