ஊதிய உயர்வு பெற்ற வவுச்சர் ஊழியர்கள் அலகு குத்தி முதல்வருக்கு நன்றி| Dinamalar

புதுச்சேரி: வாக்குறுதி அளித்தவாறு சம்பளத்தை உயர்த்தி கொடுத்த முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்து, பொதுப்பணி துறை வவுச்சர் ஊழியர்கள் அலகு குத்தி, ஊர்வலமாக சென்றனர்.

புதுச்சேரி பொதுப்பணி துறையில் பணியாற்றி வரும் 1,311 வவுச்சர் ஊழியர்களுக்கு மாத சம்பளம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கு, கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கினார். அதையடுத்து, வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.ஊதிய உயர்வு அளித்த முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்து, வவுச்சர் ஊழியர்கள் நேற்று அலகு குத்தி, வாகனங்களை இழுத்துச் செல்லும் பேரணி நடத்தினர்.

வவுச்சர் ஊழியர்கள் முதுகில் அலகு குத்தி, நான்கு 4 டாடா ஏஸ் வாகனங்கள், ஒரு லாரியை இழுத்தனர். சுதேசி மில் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து துவங்கிய பேரணி அண்ணா சாலை, நேரு வீதி வழியாக சென்று, மிஷன் வீதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து, மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.பின் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘முதல்வர் வாக்குறுதி அளித்தபடியே சம்பளத்தை உயர்த்தி கொடுத்துள்ளார். அவர் நீண்ட ஆயுளுடன் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அலகு குத்தி, வாகனங்களை இழுத்தோம்’ என்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.