போரை நிறுத்துமாறு நாம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கேட்க முடியுமா? என்று உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்வி ரமணா, “இந்த விஷயத்தில் நாம் என்ன செய்ய முடியும்? நாளை புடினுக்கு உத்தரவு பிறப்பிக்கச் சொல்வீர்களா…நாம் அவர்களிடம் போரை நிறுத்தச் சொல்ல முடியுமா? மாணவர்கள் மீது எங்களுக்கு முழு அனுதாபமும், அக்கறையும் உள்ளது. அதே வேளையில் இந்திய அரசு தனது பணியை செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பாத்திமா அஹானா என்ற பெண் மருத்துவ மாணவியின் குடும்பத்தினர், இந்திய அரசின் எந்த உதவியும் வழங்கப்படாமல் மால்டோவா-ருமேனியா எல்லையில் மாணவர்கள் சிக்கித் தவிப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஒடெசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 250 இந்திய மாணவர்கள் மால்டோவா-ருமேனியா எல்லைக்கு வந்துள்ளனர், இந்த மாணவர்கள் ருமேனியாவுக்குச் செல்ல அனுமதியின்றி சுமார் ஆறு நாட்களாக அங்கு சிக்கித் தவித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு மருத்துவம், தங்கும் வசதிகள், உணவு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகள் மற்றும் அவசரகாலப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்திய அரசாங்கத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு இன்று (வியாழக்கிழமை) காலை அவசர வழக்காக இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் “போரை நிறுத்துமாறு புடினுக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? என்று நீதிமன்றம் கேட்டது. இந்த வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான ஏஜி கே.கே.வேணுகோபால், ருமேனியா விலிருந்து மாணவர்களை மீட்கும் பணியை எளிதாக்க மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் உக்ரைனில் எல்லையில் உள்ள 4 நாடுகளுக்கு மீட்பு பணிகளை விரைவுப்படுத்த 4 அமைச்சர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
