நாளை! பெங்களூருக்கு ஜாக்பாட் அடிக்குமா?| Dinamalar

பெங்களூரு-நிதித்துறை அமைச்சர் பதவியையும் வகிக்கும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, 2022 – 23ம் நிதி ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை, கர்நாடக சட்டசபையில் நாளை தாக்கல் செய்கிறார். பெங்களூரு மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளதால், நகர வளர்ச்சிக்கு தேவையான பல கவர்ச்சி திட்டங்கள் இடம்பெறும் வாய்ப்புள்ளது.கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்தாண்டு, ஜூலை 28ல் பதவியேற்றார். பதவிக்கு வந்து ஏழு மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. நிதித்துறையை தன்னிடமே வைத்துள்ள அவர், 2022 – 23ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணியில் கடந்த 20 நாட்களாக ஈடுபட்டிருந்தார்.அமைச்சரவைநாளை முதல், பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது; 30 வரை நடக்கிறது. முதல் நாள் பகல் 12:30 மணிக்கு கர்நாடக சட்டசபையில் பசவராஜ் பொம்மை மாநில பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதன் பின் சட்ட மேலவையில் முதல்வர் தரப்பில் சபை முன்னவர் கோட்டா சீனிவாச பூஜாரி தாக்கல் செய்கிறார்.முன்னதாக பகல் 12:10 மணிக்கு சிறப்பு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அப்போது பட்ஜெட் தாக்கலுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது.கடந்தாண்டு முதல்வராக இருந்த எடியூரப்பா, 2 லட்சத்து 46 ஆயிரத்து 207 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இந்தாண்டு 2.50 லட்சம் கோடி ரூபாய் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆலோசனைபட்ஜெட் புத்தகத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பது குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடப்பதால், நகர மக்களுக்கு பல புதிய திட்டங்கள் அறிவிக்கும் வாய்ப்புள்ளது. முதல்வரே பெங்., அபிவிருத்தி துறை அமைச்சராக இருப்பதால், ஜாக்பாட் அடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.கொரோனா இரண்டாம் அலையின் போது ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். அப்போது பலர் வேலையிழந்து, பொருளாதார ரீதியாக சரிவு நிலையை சந்தித்தனர். இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.அவர்களின் தொழில் மீண்டும் உயிர் பெறுவதற்கு நிவாரண நிதி அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். விவசாயிகள்முதல்முறையாக முதல்வராக, பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்வதால், மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., – எஸ்.டி., சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு பல புதிய திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் இடம்பெறும் வாய்ப்புள்ளது.தமிழகத்தை போல், உள்ளூர் அரசு பஸ்களில் இலவச பயண வசதி ஏற்படுத்தும்படி பலர் வலியுறுத்துகின்றனர். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதற்கேற்றாற் போல் திட்டங்கள் அறிவிப்புக்கு பஞ்சமிருக்காது என்றே சொல்லலாம்.மக்களின் எதிர்பார்ப்பை பசவராஜ் பொம்மை பூர்த்தி செய்வாரா என நாளை தெரியும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.