உக்ரைனில் இருந்து டெல்லி திரும்பினாலும் இயல்புநிலைக்கு திரும்பாத மாணவர்கள்: ஜூனியர்களை முதலில் அனுப்பும் தமிழக மாணவர்கள்

புதுடெல்லி: உக்ரைன் நாட்டின் கீவ், கார்கிவ்நகரங்களில் உள்ள பாதாள அறைகளில் தஞ்சம் அடைந்திருந்த இந்திய மாணவர்கள், டெல்லிதிரும்பிய பிறகும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தமிழகத்தைச்சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் முதலில் அனுப்பி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து உக்ரைனின் உஸ்குரோத் தேசிய அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் ஒசூர் மாணவர் வாஜித் அகமது கூறும்போது, “இந்திய மாணவர்களை 200-250 பேர் கொண்ட குழுக்களாக பல்கலைக்கழக நிர்வாகம் தாயகம்அனுப்பி வருகிறது. இந்த குழுக்களில் தமிழகத்தில் இருந்து முதலாம் ஆண்டு பயிலும் ஜூனியர்களை சீனியர்கள் அதிகமாக சேர்த்தனர். புதிய மாணவர்களுக்கு வழியும் மொழியும் தெரியாமல் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும். இந்த வகையில் எங்கள் பல்கலைக்கழகத்தில் நான்தான் கடைசியாக கிளம்பி வந்தேன். வடமாநில மாணவர்கள் தனியாகவே தைரியமாக கிளம்பி மீட்பு விமானங்கள் வரை சென்று விடுகின்றனர். ஆனால் தமிழக மாணவர்கள் தனியாக செல்ல அஞ்சுகின்றனர்” என்றார்.

போரினால் நிலைமை மோசமாகிவிட்ட நகரங்களின் பாதாள அறைகளில் இருந்து மீட்கப்படும் மாணவர்கள், மேற்கு எல்லைகளில் உள்ள பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் ஓரிரு நாட்கள் தங்கவைக்கப்படுகின்றனர்.

எல்லைகளில் நெரிசல் குறைந்த பின் இங்கிருந்து படிப்படியாக மீட்பு விமானங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு உருவான பீதி டெல்லி வரும் வரை தொடர்கிறது.

இதுகுறித்து கீவ் நகரில் 2-ம் ஆண்டு மருத்துவம் பயிலும் கோவை மாணவி ஒருவர் கூறும்போது, “கார்கிவ் நகரில் 3, கீவ் நகரில் 2 என 5 பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் சேர்த்து இதுவரை 10% தமிழர்களே வீடு திரும்பியுள்ளனர். இன்னும்கூட 2 நகரங்களிலும் பாதாள அறை களில் பலர் சிக்கியிருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

பாதாள அறையில் இருந்தபோது, எங்களால் உறங்ககூட முடியாத அளவுக்கு குண்டுகள் பொழியும் ஓசை இருந்தது. உயிருடன் வீடு திரும்புவோமா என்ற நம்பிக்கை குறையத் தொடங்கியது” என்றார்.

உக்ரைனில் இருந்து நேற்று வரை மீட்கப்பட்ட சுமார் 7 ஆயிரம் இந்தியர்களில் இதுவரை 300 தமிழக மாணவர்கள் வந்துள்ளனர். உக்ரைனில் பயிலும் 20 ஆயிரம் இந்திய மாணவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.